Tuesday, 24 December 2019

மரணிக்காத அறிவு

وكان الشيخ أبو يَزيدَ البِسطامي  يقول لِعلماءِ زمانِه أخذتُم علمَكم ميِّتا عن ميّتٍ، وأخذنا علومنا عن الحيّ الذي لا يموت، 

அஷ்ஷெய்கு அபூயஸீத் அல் பிஸ்தாமீ (றஹ்) அவர்கள் தங்களின் காலத்து உலமாக்களுக்கு, ( நீங்கள் உங்களின் அறிவை “மையித்” மூலம் பெற்றீர்கள். ஆனால் நாங்களோ எங்களின் அறிவுகளை மரணிக்காத உயிருள்ளவரிடமிருந்து பெற்றோம்) என்றார்கள். 

وكان الشيخ أبو مدين إذا سمع أحدًا من أصحابه يقول في حكايةٍ اَخبَرنِي بها فلانُ بنُ فلانٍ يقول لا تُطْعمونا القديدَ، يُريد بذلك رفْعَ همَّةِ أصحابه، يعني لاتحدِّثُوا الّا بفُتُوحِكُم الجدِيدِ الّذي فتح الله تعالى به على قلوبكم في كلام الله تعالى أو كلام رسوله صلى الله عليه وسلّم، فإنَّ الواهِبَ للعلم الإلٓهيّ حيٌّ لا يموت، وليس له مَحَلٌّ في كُلِّ عصر إلّا قلوب الرِّجال. 

அஷ்ஷெய்கு அபூமதன் (றஹ்) அவர்களின் சிஷ்யர்களில் யாராவது ஒரு செய்தியை - அறிவைச் சொல்லி அதை இன்னானுடைய மகன் இன்னான் சொன்னான் என்று கூறினால் “காய்ந்த இறைச்சை எங்களுக்கு உணவாக தரவேண்டாம்” என்று சொல்வார்கள். அதாவது தங்கள் சிஷ்யர்களின் முயற்சியின் உயர்வை நாடி அவ்வாறு சொல்வார்கள்.

சுருக்கம் என்னவெனில் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று சொல்லாமல் அல்லாஹ்வின் பேச்சிற்கும்,அவனின் திருத்தூதரின் பேச்சிற்கும் அல்லாஹ் உங்களின் உள்ளத்தில் இல்ஹாம் மூலம் வழங்கிய ஞானத்தைச் சொல்லுங்கள். ஏனெனில் இறை ஞானத்தை உங்களுக்கு அன்பளிப்பாக வழங்குபவன் உயிருள்ளவன். அவன் மரணிப்பதில்லை. அவன் தனது ஞானத்தை வைப்பதற்கு பொருத்தமான இடமாக ஒவ்வொரு காலத்திலும் வாழ்கின்ற இறை ஞானிகளின் உள்ளங்களையே வைத்துள்ளான். 

அஷ்ஷெய்கு அபூ மத்யன் (றஹ்) அவர்கள் “இல்ஹாம்”என்ற விஷேட அறிவு வழங்கப்பட்டவர்களாவார்கள். இவர்கள் உலகப் பிரசித்தி பெற்ற இறை ஞான மேதை இப்னு அறபீ (றஹ்) அவர்களின் “உஸ்தாத்” ஆசானுமவார்கள். 

மேற்கண்ட இவர்களின் கூற்றின் கருத்து என்னவெனில் “கிதாப்” நூல்களில் எழுதப்பட்ட அறிவை விட அல்லாஹ்வால் அடியார்களுக்கு வழங்கப்படுகின்ற இறைஞானம்தான் சிறந்ததும், பிழையால்லாத சரியான ஞானமுமாகும். 

மேற்கண்ட இறை ஞானி அபூ யஸீத் அல்பிஸ்தாமீ (றஹ்) அவர்கள் கூறியுள்ள கருத்தும் இதே தத்துவத்தையே இயம்புகிறது. 

ஆதாரம் - அல்யவாகீத்
பாகம் - 01
பக்கம் - 15

Tuesday, 19 November 2019

தொப்பி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகதுஹூ :

தொப்பி, தலைப்பாகை அணிவதற்குரிய ஆதாரங்கள்.

 அப்துல்லாஹ் பின் உமர்
அவர்கள் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் கூறியதாவது ஒரு மனிதர்
அல்லாவின் தூதரே,இஹ்ராம் கட்டியிருப்பவர் எந்த ஆடையை அணிய வேண்டும் ? என்று கேட்டார், அல்லாஹ்வின்
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவைகள், (முழுநீளச்) சட்டைகள் தலைப்பாகைகள்,முழுக்கால் சட்டைகள்,தொப்பிகள்,காலுறைகள் ஆகியவற்றை அணியாதீர்கள்.
காலணிகள் கிடைக்காதவர் மட்டும்
காலுறைகள் அணிந்து கொள்ளட்டும். ஆனால் காலுறை இரண்டும் கனுக்கால்களுக்கு கீழே
இருக்கும் படி கத்தரித்துக்கொள்ளட்டும்.குங்குமப் பூச்சாயம் மற்றும்‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம்
தேய்க்கப்பட்ட ஆடைகளை
அணியாதீர்கள் என்று
சொன்னார்கள். (புஹாரி5083)

குறிப்பு: 
இஹ்ராம் அணியும்போது தொப்பி அணியாதீர்கள் என்று சொல்லும்போது மற்ற நேரங்களில் தொப்பி அணியுங்கள் என்று உறுதியாக கூறுவது தெரிகிறது.

இஸ்ஸத் பின்த் இயாத் கூறியதாவது, ‘அபா கிர்ஸாபா கூற நான் கேட்டிருக்கிறேன் நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் எனக்கு ஒரு தொப்பியை அளித்து‘இதனை நீ அணிந்து கொள்’எனக் கூறினார்கள்.
(முக்ஜமுல் கபீர் அத்தபரானி (2520)

சுலைமான் பின் தர்கான் அவர்கள் கூறியதாவது,‘அனஸ் ரலியல்லாஹு
அன்ஹு அவர்கள் மீது தொப்பியொன்றை நான் கண்டேன். அது மஞ்சள் நிறத்தில் கம்பலி கலந்த பட்டால் ஆனதாக இருந்தது.
(புஹாரி 5082)

(கடும் வெப்பத்தின் காரணமாக) ஸஹாபாக்கள் தலைப்பாகையின் மீதும்,தொப்பியின் மீதும் ஸஜ்தா
செய்வார்கள். அறிவிப்பவர் :ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு
நூல் : புகாரி

‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்; அவர்கள் (மக்கா வெற்றியின் போது)கறுப்புத் தலைப்பாகை அணிந்தவர்களாக
மக்காவில் நுழைந்தனர்’
அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு அப்துல்லா (ரலியல்லாஹுஅன்ஹு)
நூல்முஸ்லிம்

 (அதே மக்கா வெற்றியின்போது) ‘நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் கறுப்புத் தலைப்பாகை அணிந்த நிலையில் மக்களுக்கு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்’
அறிவிப்பவர் : ஜஃபர் இப்னு அம்ரு (ரலியல்லாஹுஅன்ஹு)
நூல் : முஸ்லிம்

 ‘நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் ஒளு செய்யும்
போது தன் தலைப்பாகையின் மீது மஸஹ் செய்தார்கள்
அறிவிப்பவர் அனஸ்
(ரலியல்லாஹு அன்ஹு)
நூல் : அபூதாவூத், இப்னு மாஜா

 இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு
அவர்கள் தனது தலைப்பாகையை இரண்டு தோல்களுக்குமிடையில் தொங்க விடுபவர்களாக இருந்தார்கள். (திர்மிதி)

இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)மக்காவுக்குப் புறப்பட நேர்ந்தால், ஒட்டகப் பயணம் சிரமமாகும் போது ஏறிச் செல்வதற்கு (மாற்று வாகனமாக) கழுதையையும், ஒரு தலைப்பாகையையும் வைத்திருப்பார்கள். அதை தலையில் கட்டிக் கொள்வார்கள்’.
அறிவிப்பவர் : இப்னு உமர்
(ரலியல்லாஹு அன்ஹு)
நூல் : முஸ்லிம்

அப்துல்லாஹ் பின் உமர்
ரலியல்லாஹு அன்ஹு
அவாகள் அறிவிக்கிறார்கள், நாயகம்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளை தொப்பி அணிந்திருந்தார்கள்.’ 
-நூல்:தப்ரானி.

ருக்கானா ரலியல்லாஹு அன்ஹு
அவர்கள் சொன்னார்கள்,நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்
அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் நமக்கும் முஷ்ரிக்குகளுக்கும் உள்ள
வித்தியாசம் தொப்பியின் மீது தலைப்பாகை அணிவதுதான்’.
 நூல்: ஸுனன் அபூதாவூது 4075,
ஸுனன் திர்மிதி 3919.

 ஹஜ்ரத் ஹஸனுல் பஸரி
ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், ‘ஸஹாபாக்கள் தங்களுடைய தலைப்பாகை தொப்பியின் மீது ஸஜ்தா செய்பவர்களாக இருந்தார்கள்’.-
நூல் புஹாரி 1/151

 தப்ரானி இமாம் மற்றும் சுயூத்தி இமாம் ஆகியோர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் வெள்ளை தொப்பி அணிந்திருந்தார்கள் என்று அறிவிக்கிறார்.
 தப்ரானி இமாம் அவர்கள் இதை
நம்பகமானது என்றும், இமாம் சுயூத்தி அவர்கள் ஸஹீஹான ஹதீது என்றும்
கூறுகின்றார்கள். 
நூல்:சிராஜுல் முனீர் பாகம் 4,
பக்கம் 112

அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு
அவர்கள் தொப்பி அணிவதை வழக்கமாக கொண்டிருந்தனர். நூல்:
ஸஹீஹுல் புஹாரி பாகம் 2
பக்கம் 863.

. ஹஜ்ரத் முல்லா அலி கரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள், ‘தொப்பியானது
முஸ்லிம்களின் சிறப்பான,முக்கிய இஸ்லாமிய சின்னமாகும்.- 
மிர்காத் அல்மஸாபீஹ் வால்யூம்
 8, பக்கம் 246.

எமக்கு இந்த விசயத்தில் சஹீஹான அறிவிப்புகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய
வழிமுறையை சுட்டிக்காட்டுகிறது.
இதனால் தலையை மறைப்பது ஒரு சுன்னத்தான விசயம் என உறுதியாகக்
கூறமுடியும்.

Sunday, 27 October 2019

ஒடக்கத்து புதன்

*ஒடுக்கத்துப் புதன்* 


கேள்வி: ஒடுக்கத்துப் புதனன்று நாம் செய்ய வேண்டியதென்ன?
பதில்: ஸபர் மாதத்தின்  இறுதிப்புதனன்று இரவு அவ்வருடத்திற்கான மூன்று இலட்சம் பலாய், முஸீபத்துகள் இறங்குவதாக மாபெரும் தவஞானி குத்புல் ஹிந்து காஜா முயீனுத்தீன்  ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் அகக்கண் பார்வையால் கண்டறிந்ததாக அன்னாரது சீடர் பரீதுத்தீன் ஷக்கன்ஜீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது 'ஜவாஹிருல் கம்ஸா' எனும் நூலில் கூறுவதோடு அத்தினத்தில் ஸலாமுன் எனத் தொடங்கும் திருவசனங்களை எழுதிக் குடித்தால் அச்சோதனைகள் அவர்களை அணுகாது எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
'நோய் மொத்தமாக இறங்குகிறது.நோய் நிவாரணி கொஞ்சம் கொஞ்சமாக இறங்குகிறது' எனற நபிமொழியை அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மூலமாக தைலமி ரஹிமஹுல்லாஹ் அவர்களும், ஹாகிம் தாரீகிலும் பதிவு செய்துள்ளனர். இதனை இமாம் சுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி தமது அத்துர்ருல் மன்தூர் எனும் நூலில் கூறுகின்றனர். பதாவா ஹதீதிய்யா ஓரம் பக்கம் 233
குத்புல் ஹிந்த் அவர்களின் கனவுக்கு இந்த நபிமொழியும் ஆதாரமாக அமைகின்றது.
நன்றி: வஸீலா 1-11-87
ஒடுக்கத்துப் புதன் துஆ
بسم الله الرحمن الرحيم.
سَلاَمٌ قَوْلاًَ مِّنْ رَّبِّ رَّحِيْمٍ. سَلاَمٌ عَلَى نُوْحٍ فِى الْعَالَمِِيْنَ. سَلاَمٌ عَلىَ اِبْرَاهِيْمَ. سَلاَمٌ عَلَى مُوْسٰى وَهَارُوْنَ. سَلاَمٌ عَلٰى اِلْيَاسِيْنَ. سَلاَمٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خَالِدِيْنَ. سَلاَمٌ هِيَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ. اَللّٰهُمَّ اَعْصِمْنَا مِنَ الْبَلآءِ وَدَرْكِ الشَّقَآءِ وَسُوْءِِ الْقَضَآءِ وَشَمَاتِةِ الْآعْدَآءِ وَمَلْجُوْمِ الْوَبَآءِ وَمَوْتِ فُجْاءَةٍ وَمِنْ زَوالِ الْبَرَكَةِ وَالنِّعْمَةِ وَمِنَ الْبَرَصِ وَالْجُذَامِ وَالْجُبْنِ وَالْبَرْصَامِ وَالْحُمّٰى وَالشَّقِيْقَةِ وَمِنْ جَمِيْعِ الْاَمْرَاضِ وَالْاَسْقَامِ بِفَضْلِكَ وَجُوْدِكَ يَاذَالْجَلاَلِ وَالْاِكْرَامِ بِرَحْمَتِكَ يَااَرْحَمَ الرَّاحِمِيْنَ وَصَلَّى اللهُ عَلىَ خَيْرِ خَلْقِهِ مُحَمَّدٍ وَعَلىَ اٰ لِهِ وَاَصْحَابِهِ وَسَلَّمْ وَالْحَمْدُ لِلّهِ رَبِّ الْعَا لَمِيْنَ اٰمِيْنَ .
இதை கரைத்து குடித்த பின் நக்ஷபந்தியா ஷெய்குமார்கள் பேரில் பாத்திஹா ஓதி ஹதியா செய்யவும்.
ஒடுக்கத்துப் புதன் உண்டா?
சபர் மாத இறுதிப் புதன் கிழமையினையே ஒடுக்கத்துப் புதன்என்று அழைக்கின்றனர்.
 
இந்த நாளில் வாழை இலைகளிலோ அல்லது பனை ஓலைகளிலோ திருக்குர்ஆன் வசனங்களை எழுதி அதை நீரால் கரைத்துக் குடிக்கும்வழக்கமும், எழுதப்பட்ட இலையை உடலில் குறிப்பாக தலையில் தேய்த்துக் குளிக்கும் வழக்கமும் தொன்று தொட்டு முஸ்லீம்களிடம்
இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் கற்றறிந்த மார்க்க அறிஞர்களாக இருந்தனர்.அவர்களின் பார்வையில் இது மார்க்கத்திற்கு உட்பட்டதாகவே தெரிந்தது. எனவே அதை அவர்கள் தடுக்கவில்லை.
 
எனவே இது பற்றி திருக்குர்ஆனும் நபி மொழிகளும், இஸ்லாமிய அறிஞர்களால் சொல்லப்பட்ட தகவல்களையும் சுருக்கமாகத் தருகின்றோம்.
 
அல்லாஹ் படைத்த ஏழு நாட்களில் கெட்ட நாள், மிடிமை, கஷ்டம், நோய் போன்றவற்றுக்கான நாள் உண்டு என்பதற்கு திருக்குர்ஆனில் ஆதாரம் உள்ளது. 
انا ارسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر
நிச்சயமாக நாம் அவர்கள் மீது ("ஆத்" கூட்டத்தினர் மீது) "நஹ்ஸ்" உடைய நாளில் கடுமையான காற்றை அனுப்பி வைத்தோம். 
திருக்குர்ஆன் – கமர் அத்தியாயம் – வசனம் –101 
 
فارسلنا عليهم ريحا صرصرا في ايام نحسات
நிச்சயமாக நாம் அவர்கள் மீது "நஹ்ஸ்" உடைய நாட்களில் கடுமையான காற்றை அனுப்பி வைத்தோம். 
திருக்குர்ஆன் – புஸ்ஸிலத் அத்தியாயம் – வசனம் – 16 
 
மேற்கண்ட இரு வசனங்களிலும் முன் வாழ்ந்த கூட்டத்தினருக்கு அல்லாஹ் கடுங் காற்றை அனுப்பி அவர்களைத் தண்டித்ததாக  கூறியுள்ளான். 
 
மேற்கண்ட இரு வசனங்களில் முந்திய வசனத்தில் "நஹ்ஸ்" என்ற சொல் ஒருமையாகவும் இரண்டாம் வசனத்தில் பன்மையாகவும் வந்துள்ளது. இச்சொல்லுக்கு தீமை, மிடிமை, தரித்திரம் போன்ற அர்த்தங்கள் உள்ளன. மேற்கண்ட இரு வசனங்கள் மூலம் "நஹ்ஸ்" உடைய நாளொன்று உண்டு என்பது தெளிவாகின்றது. அந்நாள் எது என்பதில்அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு காணப்படுகிறது இவ்விவரத்தை சரியாகஅறிந்து கொள்வதாயின் "ஆத்" கூட்டத்தினருக்கு அல்லாஹ் பயங்கர காற்றை காற்றை அனுப்பிய மாதம், நாள் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும். இதில் கூட வரலாற்று ஆசிரியர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உண்டு. எனினும் இது தொடர்பாக சொல்லப்பட்டுள்ள பலருடைய கருத்துக்களையும் இங்கு தருகின்றோம்.
 
அந்த நாள் புதன் கிழமைதான் என்று அநேக அறிஞர்கள் கருத்துக் கூறி உள்ளனர்.ஆயினும் அவர்கள் எந்த மாதம் என்பது பற்றி தெளிவாகவும் திட்டவட்டமாகவும் ஒன்றும் சொன்னதாகக் காணவில்லை. தப்சீர் றூஹுல் மஆநீயில் ஆசிரியர் அவர்கள்தங்களின் மேற்கண்ட விரிவுரை நூல் 27 ம் பாகம் 119 ம் பக்கத்தில் அது  ஷவ்வால் மாதப் பிற் பகுதியிலுள்ள புதன் கிழமை என்று கூறியுள்ளார்கள். அல்லாமா வகீஉ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் "குறர்" என்ற நூலில் ஒவ்வொரு மாதத்தின் கடைசிப் புதன்கிழமை "நஹ்ஸ்" உடைய நாள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளதாகஇப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுஅவர்களைத்தொட்டும் வந்துள்ள நபீ மொழியை இப்னு மர்தவைஹ்ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும்,அல்ஹதீபுல் பக்தாதீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் அறிவித்துள்ளதாகஎழுதியுள்ளார்கள். இமாம் தபறானீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அந்நாள் புதன் கிழமை என்றுதங்களின்தபறானீ என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள். ஆயினும் மேற்கண்ட இரு நபீ மொழிகளையும் அபூ ஹாதம், இப்னு ஜவ்ஸீ, இப்னு றஜப், சகாவீ ஆகியோர் "ழயீப்" பலம் குறைந்தவை என்று கூறி உள்ளனர்.
புதன் கிழமை "நஹ்ஸ்' உடைய நாள் என்று தகவல்  இருப்பது போல அது நல்ல நாள் என்றும் தகவல் உள்ளன. மின்ஹாஜுல் ஹுலைமீ, ஷுஆபுல் பைஹகீ ஆகிய இரு நூல்களிலும் புதன் கிழமை மதிய நேரத்தின் பின் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இமாம் புர்ஹானுல் இஸ்லாம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் "ஹிதாயஹ்" என்ற நூலில் வந்துள்ளதாக"தஃலீமுல் முதஅல்லிம்" என்ற நூலில், புதன் கிழமை ஆரம்பிக்கப்படுகின்ற எந்த ஒரு காரியமும் நிச்சயமாக நிறைவேறும் என்றும் அன்றுதான் அல்லாஹ் ஒளியைப்படைத்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால்தான் பெரியோர்கள்-ஹஸ்ரத்மார்கள் கல்வி சம்பந்தமான வகுப்புக்களை புதன் கிழமையில் தொடக்கிவந்துள்ளார்கள். அதோடு புதன் கிழமை கல்விக்குரிய நாளென்றும் பரவலாககணிக்கப் படுகின்றது. 
எவனாவது புதன் கிழமை மரங்களை நட்டு "சுப்ஹானல் பாஇதில் வாரிதி" என்று சொல்வானாயின் அவை அவனுக்கு காய் கனிகளைக் கொடுக்கும் என்ற இந்த நபீ மொழியை ஜாபீர் ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்க இப்னு ஹிப்பான் ரஹ்மத்துல்லாஹி அலைஹிஅவர்களும் தைலமீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும்  தமது நூல்களில் பதிவு செய்துள்ளார்கள். இந்த நபீ மொழியை ஆதாரமாகக் கொண்டு பெரியோர்கள் செயல் பட்டு வந்துள்ளார்கள்.
புதன் கிழமை "நஹ்ஸ்" உடைய நாள் என்பதற்கு சில தகவல்களை இங்கு தருகிறோம். "எனது உம்மத்துக்கள் வெறுக்கமாட்டார்கள் என்றிருந்தால் புதன் கிழமை பயணம் செய்ய வேண்டாம் என்று நான் அவர்களை பணித்திருப்பேன்" என்று பி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  கூறியதாக ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹ அறிவித்துள்ளார்கள். இந்த நபீ மொழி "பிர்தௌஸ்" என்ற நூலில் பதிவாகி உள்ளது" 
‘வார நாட்களில் சனிக்கிழமை – சூட்சி,துரோகத்துக்குரிய நாளாகும். ஞாயிற்றுக்கிழமை மரம் நடுதல், கட்டிடம் கட்டுவதற்குரிய நாளாகும். வியாழக் கிழமை தேவைகளைத் தேடுவதற்கும் அதிகாரிகளிடம் செல்வதற்கும் உரிய நாளாகும். வெள்ளிக் கிழமை திருமணப் பேச்சுக்கும், திருமணம் செய்வதற்கும் பொருத்தமான நாளாகும்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறியுள்ளார்கள். 
இந்த நபீ மொழியை இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவித்ததாக அபூயஃலா ரஹ்மத்துல்லாஹி அலைஹிஅவர்களும், அபூ சயீத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் அறிவித்ததாக இப்னு அதிய்யஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹிஅவர்களும், தமாம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் "அல்பவாயித்"என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
ஆயினும் சகாவீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இந்த நபீ மொழியை பலவீனமானது என்று கூறியுள்ளார்கள். 
வெண்குஷ்டம்,கருங்குஷ்டம் இரண்டும் புதன் கிழமையில் தான் வெளியாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த நபீ மொழியை இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளதாக இப்னு மாஜாவும், வேறு இரு வழிகளில் ஹாகிம் அவர்களும் பதிவு செய்துள்ளார்கள். புதன் கிழமை நகம் வெட்டுதல் கூடாதென்றும் அவ்வாறு செய்தால் குஷ்ட நோய் வரும் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன. ஒருநோயாளியிடம் நலம் விசாரிக்கச் செல்வது நல்லதெனினும் அதை புதன் கிழமைதவிர்த்துக் கொள்வது நல்லதென்று தகவல்கள் கூறுகின்றன. 
புதன் கிழமை மிடிமைக்குரிய நாளாக கருதப்படும் என்றும், மாதத்தின் கடைசிப் புதன் கிழமை மிகவும் கடுமையான மிடிமைக்குரிய நாளென்றும் "அர்றவ்ழஹ்" என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
மாதத்தின் கடைசிப் புதன் கிழமை மிடிமைக்குரிய நாளென்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்.    "ரூஹுல் பயான்" என்ற திருக்குர்ஆன் விரிவுரை நூல்  வால்யூம் 09 பக்கம் 324 புதன் கிழமையில் சுவர்கத்து நீர் உலகத்து நீருடன் கலக்கப் படுவதால் அன்று குளிப்பதுசிறந்ததென்று கூறப் பட்டுள்ளது. 
தண்டனை பெற்ற எந்த ஒரு கூட்டமாயினும் அது புதன் கிழமையிலேயே தண்டிக்க பட்டுள்ளது. இத்தகவல் ரூஹுள் பயான் வால்யூம் 08 பக்கம் 328 இல் இடம்பெற்றுள்ளது. சபர் மாதத்தின் கடைசிப் புதன் கிழமையில் முன்னூற்று இருபதாயிரம் சோதனைகள், துன்பங்கள் இறங்குவதாகவும், வருட நாட்களில் அந்நாள் ஒன்று மட்டுமே கஷ்டமான நாள் என்றும் இறைஞானிகள் சொல்லியிருப்பதாக "முஜர்றபாதுத் தைறபீ" என்ற நூல் 103 ம் பக்கத்தில் கூறப் பட்டுள்ளது. 
அஷ் ஷெய்குல் காமில் பரீதுத்தீன் மஸ்ஊத் கன்ஜே ஷகர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், தங்களின் ஞான குரு ஹாஜா முயீனுத்தீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹிஅவர்களின் அவ்ராத் தொகுப்பில்பின்வருமாறு இருக்கத் தான் கண்டதாக கூறியுள்ளார்கள். ஒவ்வொரு வருடமும் முன்னூற்று இருபதாயிரம் சோதனைகள் – துன்பங்கள் இறங்குகின்றன அவை யாவும் சபர் மாதத்தின் இறுதிப் புதன் கிழமையிலேயே இறங்குகின்றன. அந்த வருட நாட்களில் இந்நாள் மிகவும் கஷ்டமானது. அன்று யாராவது நான்கு ரக்அத் தொழுது நான்குரக்அத்திலும் "பாத்திஹா சூரா" ஓதிய பின் இன்னா அஃதைனாகல் கவ்தர் என்ற சூரத்தை 17தடவைகளும், குல்ஹுவல்லாஹ்வை ஐந்து தரமும் , குல் அஊது பிறப்பில் பலக் ஒரு தரமும், குல் அஊது பிறப்பின் நாஸ் ஒரு தரமும் ஓதினால் அந்த வருடம் முழுவதும் அவன் சகல பலாய்களிலிருந்தும் பாதுகாக்கப் படுவான். பின்பு "சலாம்" என்று சொல்லப்படுகின்ற திருக்குர்ஆன் வசனங்களை பன்னீர், கஸ்தூரி, குங்குமம் கொண்டு பீங்கானில் எழுதிக்குடிக்கவும் வேண்டும்.
 பழாயிறுஷ் ஷுஹூரில் ஹிஜ்ரிய்யஹ் – பக்கம் – 33 ,34 
 
 
من بشرني بخروج صفر ابشره بالجنة
 
சபர் மாதம் முடிந்து விட்டதென்று என்னிடம் சுபச்செய்தி சொல்பவனுக்கு சுவர்கத்தைக் கொண்டு நான் சுபச்செய்தி சொல்வேன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறியுள்ளார்கள் என்றும் "ஹயாதுல் ஹயவான்" என்ற நூல் முதலாம் பாகம் 120 ம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
 
"இஆனதுத் தாலிபீன்" என்ற சட்டக்கலை நூலை எழுதியவரும்,  மக்காவில் பிறந்து மதீனாவில் சமாதி கொண்டுள்ளவருமான அஸ்ஸெய்யித் முஹம்மத் ஷதா அத்திம்யாதீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களின் "நிஹாயதுல் அமல்" என்ற சட்ட நூலில் 208 ம் பக்கத்தில் ஒடுக்கத்துப் புதன் பற்றிக் குறிப்பிடுகையில் ஒவ்வொரு வருடத்திற்கெனவும் அல்லாஹ்வால் ஏற்படுத்தப்படுகின்ற பலாய், கஷ்டங்கள்,சோதனைகள், "லவ்ஹுல் மஹ்பூல்" பலகையிலிருந்து பூமியை அடுத்துள்ள முன் வானத்துக்கு சபர் மாத இறுதிப் புதனன்று இறக்கப்படுகின்றன. ஆகையால் கீழ் காணும் திருவசனங்களைப்
 
 سلام قولا من رب الرحيم
 
سلام على عباد الذين اصطفى
 
سلام على نوح في العلمين سلام على ابراهيم
 
سلام على موسى وهارون
 
سلام على الياسين
 
سلام هي حتى مطلع الفجر
 
 
 பாத்திரங்களில் எழுதி அதைத் தண்ணீரால் கரைத்து குடிப்பவர்களுக்கு குறித்தசோதனைகள் ஏற்படமாட்டாது என்று கூறியுள்ளார்கள். 
மக்காவில் பிறந்த இந்த நூலாசிரியர்கள் எழுதியிருப்பதைப் பார்க்கும்போது விதண்டாவாதம் செய்வோர் ஒடுக்கத்துப் புதன் பற்றி சொல்லும் கதை மூடத்தனமானது என்பது தெளிவாகிறது.
ஒவ்வொரு மாதத்தின் இறுதிப் புதன் கிழமையும் குறிப்பாக 'சபர்" மாதத்தின் இறுதிப் புதன் கிழமையும் "நஹ்ஸ்" மிடிமைக்குரிய நாட்கள் என்பதற்கான மேற்கண்ட ஆதாரங்கள் கொண்டும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்கு மரண வருத்தம் "சபர்" மாதத்தின் இறுதிப் புதன் கிழமை ஆரம்பமானதை கருத்திற் கொண்டும் அன்றைய தினம் திருக்குர்ஆன் வசனங்களை வாழை இலையிலோ அல்லது வேறு பாத்திரங்களிலோ எழுதி நோய்,மிடிமை, கஷ்டம், போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு பெறும் நோக்குடன் குடிப்பதை இஸ்லாமிய மூத்த அறிஞர்கள் நல்ல காரியமெனக் கூறியுள்ளதால் இவ்வழக்கம் எந்த வகையிலும் "ஹறாம்" ஆகவோ "பித்அத்" ஆகவோ "ஷிர்க்" ஆகவோமாட்டாது. 
எனவே "சபர்" மாதத்தின் இறுதிப் புதன் கிழமை திருக்குர்ஆன் வசனங்களை வாழை இலையிலோ காகிதத்திலோ எழுதிக் கரைத்துக்  குடிப்பதும், உடலில் தேய்த்துக் குளிப்பது "முபாஹ்" ஆகுமாக்கப்பட்ட காரியமே அன்றி அது எந்த வகையிலும் மார்கத்துக்கு முரணாகி விடாது. அதனால் ஏதோ ஒரு வகையில் பயன்தான் கிடைக்குமேயன்றி பாவம் வந்துவிடாது. இது தொடர்பாக வந்துள்ள நபி மொழிகளில் பலம் குறைந்தவை என்று வைத்துக் கொண்டாலும் கூட பலம் குறைந்த நபி மொழிகளை ஆதாரமாக கொண்டு செயல்படமுடியுமென்பதை அவர்கள் தெரிந்து கொள்ளல் வேண்டும். இவ்வழக்கம் "ஹறாம்"என்பதற்கோ "ஷிர்க்" என்பதற்கோ ஆதாரம் இல்லாதிருப்பதாலும், ஆனால் "முபாஹ்"ஆஹும் என்பதற்கு ஆதாரம் இருப்பதாலும் இதை தடுப்பது கூடாது என்பதே தெளிவான முடிவு.

Saturday, 10 August 2019

அரfபா நாள்

காஜா_நிஜாமுதீன்_யூஸுஃபி_மேலை
ஹாஜிகள்_அரஃபாவில்_இருக்கும்_போது_தான்_நாமும்_அரஃபா__நோன்பு_வைக்க_வேண்டுமா?

துல்ஹஜ் 9 ம் நாள் அரஃபா என்பது எல்லோருக்கும் தெரியும். பொதுவாக பிறைக் கணக்கு என்பது ஒவ்வொரு பகுதியிலும் முதல் நாளாக எந்த நாளை முடிவு செய்கிறார்களோ அந்த கணக்கின் படியே நோன்புப் பெருநாளை வைக்க வேண்டும் என்பதே ஹதீஸின் கருத்து. ஹாஜிகள் அரஃபாவில் இருக்கும் நாளில் தான் உலகின் ஏனைய பாகங்களில் அரஃபா நோன்பு வைக்க வேண்டும், என்ற சட்டத்தை எந்த ஃபிக்ஹ் நூலிலும் காணமுடியாது.

மாற்றமாக அரஃபா நாள் துல்ஹஜ் 9 ம் நாள் என்று தெளிவாகவே கூறப்பட்டிருக்கிறது. தவிர தலைப்பிறையில் சந்தேகம் ஏற்பட்டு ஒரு நாள் தாமதமாக மாதம் ஆரம்பமானாலும் அரஃபா நாள் (மற்ற நாடுகளில்) பெருநாளாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் காரணமாக (நம்முடைய கணக்கின்படி 9 ம் நாளில்) நோன்பு வைப்பது ஹராமோ மக்ரூஹோ கிடையாது, என்று மஹல்என்ற நூலின் சிறப்புக் குறிப்பில் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது. (நூல்: ஹாஷயத்துல் கல்லியூபீ அலல் மஹல்லி - 2/73)

இணையதளத்தில் இப்படி ஒரு தகவல் படித்த ஞாபகம். ஒரு தடவை சீனாவில் ஹஜ்ஜுப் பெருநாள். அதே தினத்தில் மக்காவில் அரஃபா. ஹாஜிகள் அரஃபாவில் கூடியுள்ளார்கள்.ஹாஜிகள் அரஃபாவில் இருக்கும் போதுதான் நோன்பு வைக்க வேண்டுமென்றால் ஹஜ்ஜுப் பெருநாளன்று நோன்பு வைப்பது ஹராமாக்கப் பட்டிருக்கிறதே. 

இவர்களுக்கு மட்டும் இந்த நோன்பிலிருந்து விலக்களிக்கப்படுமா?மார்க்கத்தின் சட்டம் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் அதன்படி செயல்படுவதற்குத் தோதுவாகவே இருக்கும்.

ஒரு தடவை ஆயிஷா (ரலி) ஒருவர் அரஃபா நாளில் வந்தார். அவர் அரஃபா நோன்பு வைக்கவில்லை. இன்று ஹஜ்ஜுப் பெருநாளாக இருக்குமோ என்ற சந்தேகத்தினால் தான் அரஃபா நோன்பு வைக்கவில்லை, என்று கூறினார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் மக்கள் பிறை கண்டு நோன்பு வைக்கும் நாள் தான் நோன்பு நாள். மக்கள் பெருநாள் கொண்டாடும் நாள் தான் பெருநாள். (நாமாக ஒரு நாளை சந்தேகப்பட்டு நோன்பு நோற்காமல் இருக்க வேண்டிய அவசியமில்லை.) என்று கூறினார்கள். (நூல்: அல்பைஹகீ)

ஹாஜிகளோடு ஒப்புவமை:

அரஃபா நோன்பே அரஃபாவில் இருக்கும் ஹாஜிகளுக்காக துஆ செய்வதற்காகத் தான். அவர்களோடு நாமும் ஈடுபட வேண்டுமானால் அவர்கள் அரஃபாவில் இருக்கும் போது தானே நாமும் நோன்பு வைக்க வேண்டும், என்று கேட்கலாம்.

இங்கு ஒரு விஷயத்தை விளங்க வேண்டும். அரஃபா நாளில் நோன்பு வைக்க வேண்டும் என்பது சட்டம். ஹாஜிகளோடு ஒப்பாக வேண்டும் என்பது ஹிக்மத் - அறிவார்ந்த விளக்கம். சட்டமென்பது நமக்கிடப்பட்ட கட்டளை. நாம் விளங்கும் ஹிக்மத்தை அடிப்படையாக வைத்து சட்டத்தை மாற்றிக் கொள்ள முயாது. கர்ப்பத்தை அறிவதற்குத் தான் இத்தா என்பதற்காக ஸ்கேன் மூலம் கருத்தரிக்க வில்லை என்று அறிந்த பின் இத்தா தேவையில்லை என்று சொல்ல முடியுமா? 

 கட்டளையின் அடிப்படையில் தான் சட்டத்தை நோக்க வேண்டுமே தவிர ஹிக்மத்தின் அடிப்படையில் அல்ல. இந்த ஹிக்மத் (அறிவார்ந்த விளக்கம்) என்பது நாமாகக் கூறுவதாகத் தான் இருக்கும். ஹதீஸில் நேரடியாக கூறப்பட்டிருக்காது.

அரஃபா நோன்புக்கு இந்த ஹிக்மத் மட்டுமல்ல. மேலும் பல காரணங்களும் கூற முடியும். அரஃபா நோன்பின் மூலம் கடந்த வருடம் மற்றும் வரப்போகும் வருடத்தின் பாவங்கள் மன்னிக்கப் படுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ) எனவே வரும் வருடத்தில் அல்லாஹ் பாவங்களை விட்டும் பாதுகாக்கிறான். அப்படியே பாவம் நிகழ்ந்து விட்டாலும் தௌபா செய்வதற்குரிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறான்.

ஹாஜிகள் அரஃபா நாளில் நோன்பு வைக்க மாட்டார்கள். அவர்கள் ஹஜ்ஜின் மூலம் அன்று பிறந்த பாலகனைப் போல திரும்புகின்றனர். எனவே ஹஜ்ஜுக்கு செல்ல முடியாதவர்களுக்கு அரஃபா நோன்பின் மூலம் இவ்வளவு பெரிய சிறப்பை அளிக்கிறான் போலும். இதையும் இந்த நோன்புக்கு ஹிக்மத்தாக சொல்ல முடியும்.

இஸ்லாத்தில் இரண்டு பெருநாட்களும் அடியார்களின் சிறப்பான வணக்க வழிபாடுகளைத் தொடர்ந்து வர வேண்டும். ஒரு முஃமினின் மகிழ்ச்சியும் இபாதத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். நோன்புப பெரநாள் கடமையான நோன்பைத் தொடர்ந்து வருகிறது. அது போல் ஹஜ்ஜுப் பெருநாள் கடமையான ஹஜ்ஜைத் தொடர்ந்து வருகிறது. அரஃபா தான் ஹஜ் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உலகின் மற்ற பகுதியில் உள்ளவர்களுக்கு அரஃபா நோன்பைத் தொடர்ந்து வருகிறது. இதையும் ஒரு ஹிக்மத்தாக கூறலாம். இப்படி அரஃபா நோன்புக்கு பல காரணங்களைக் கூறலாம். ஆனால் நமக்கிடப்பட்ட கட்டளை துல்ஹஜ் 9 ம் நாள் நோன்பு வைப்பது. மக்காவின் 9 ம் நாளல்ல. அவரவர் வாழும் பகுதியின் 9 ம் நாள் தான்.

அரஃபா நோன்பில் ஹாஜிகளோடு ஒப்பாக வேண்டும் என்ற காரணம் (ஹிக்மத்) அரஃபா நாள் மக்காவோடு ஒத்துவரும் நாடுகளுக்கு மட்டுடே பொருந்தும். மற்ற நாடுகளுக்கு இது பொருந்தாது, என்பதே இயற்கை.

இந்தியாவுக்கு மக்காவுக்கு இரண்டரை மணி நேரம் வித்தியாசம் உள்ளது. நாம் நோன்பு திறக்கும் போது அரஃபாவில் இருப்பவர்களுக்கு மணி 3.30 அல்லது நான்கு மணியாகும். அந்த நேரம் தான் அரபாவின் முக்கியமான நேரம்.அந்நேரத்தில் நம்முடைய நோன்பு முடிந்திருக்கும்.

இதைத் தவிர மக்காவில் பகலாக இருக்கும் போது உலகின் ஒரு பகுதி இரவாக இருக்கும். அந்த நாடுகளில் ஹாஜிகளோடு ஒப்பாக வேண்டும் என்பதற்காக இரவில் நோன்பு வைக்க முடியுமா? நமக்கு அரஃபா நாள் ஒரு நாள் தாமதமாக வந்தாலும் நாம் நோன்பிருந்து ஹாஜிகளுக்காக செய்யும் துஆவை ஏற்றுக் கொள்வதில் அல்லாஹ்வுக்கு எந்த சிரமமுமில்லை.

நபித்தோழர்களின் காலத்தில் முழு இஸ்லாமிய நாடுகளிலும் 

எப்போதும் ஒரே நாளில் நோன்பு ஆரம்பித்து பெருநாள் 

கொண்டாட வில்லை, என்பது நபிமொழிகளின் மூலம் தெளிவாகத் தெரிய முடியும். மதீனாவுக்கும் சிரியாவுக்கும் ரமளானில் ஒரு நாள் வித்தியாசம் இருந்ததை முஸ்லிம் ஷரீபில் உள்ள ஹதீஸின் மூலம் விளங்க முடிகிறது. நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதா - இறுதி ஹஜ் செய்த (ஹிஜ்ரி 10 ம்) ஆண்டு கூட ஹஜ்ஜுப் பெருநாளில் மக்காவுக்கும் மதீனாவுக்கும் மத்தியில் ஒரு நாள் வித்தியாசம் இருந்ததாக கூறப்படுகிறது. (நூல்: சந்த் மகாதீப்)

ஹாஜிகள் அரஃபாவில் இருக்கும் போது தான் அரஃபா நோன்பு வைக்க வேண்டுமென்று ஷரீஅத்தில் வலியுறுத்தப் பட்டிருந்தால் அதில் நபித் தோழர்கள் நம்மை விட அதிக அக்கறை காட்டியிருப்பார்கள். துல்ஹஜ் பிறை பிறந்து ஒன்பதாம் நாள் தான் அரஃபா நாள். எட்டு நாள் அவகாசம் இருக்கிறது. எனவே நாட்டின் பல பாகத்திலுள்ள நபித் தோழர்கள் மக்காவில் அரஃபா நாள் எப்போது? என்று அறிவதற்கு ஏற்பாடு செய்திருப்பார்கள்.

உமர் (ரலி) அவர்களுடைய ஆட்சி காலத்தில் தகவல் தொடர்புத் துறையை துரிதப்படுத்துவதற்கு பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் மக்காவின் அரஃபா நாளை மதீனாவிலோ அல்லது மற்ற பகுதிகளிலோ அறிவிப்பதற்கு எந்த ஏற்பாடும் செய்ய வில்லை. எனவே நமக்கு நாம் துல்ஹஜ் பிறை கண்ட 9 ம் நாளில் அரஃபா நோன்பு வைப்பதே சுன்னத்தாகும்.

எது அரஃபா நாள்?

அரஃபா நோன்பு பற்றிய நபிமொழிகளில் அரஃபா நாளன்று நோன்பு வைக்க வேண்டும், என்று தானே வந்திருக்கிறது. துல்ஹஜ் 9 ம் நாள் என்று வரவில்லையே, ஆஷுரா நோன்பு பற்றி ஆஷூரா பத்தாம் நாள் என்று வந்திருக்கிறதே, என்ற வாதமும் அர்த்தமற்றது. துல்ஹஜ் 9 ம் நாள் என்று ஹதீஸில் வரவில்லையே என்ற கேள்வி வேடிக்கையானது.

துல்ஹஜ் 9 ம் நாளுக்குப் பெயர் தான் அரஃபா நாள் என்பது சாதாரண மார்க்க அறிவுள்ளவர்களும் விளங்கிக் கொள்ளமுடியும். அரபியில் நாட்களுக்கு பெயர்கள் இருக்கும். அந்தப் பெயரை வைத்து மட்டும் யாரும் சட்டம் சொல்லிட முடியாது. ஜும்ஆவுடைய நாள் என்பது வாரத்தின் குறிப்பிட்ட ஒரு நாளின் பெயர். உலகில் எங்காவது நமக்கு இரவாக இருக்கும் போது  ஜும்ஆ தொழுகை நடந்து விட்டால் உடனே நாமும் அதே நேரத்தில் தான் ஜும்ஆ தொழவேண்டும், என்று யாரும் சொல்லமுடியாது.

ஆஷுராவுடைய நாளில் நோன்பு வைப்பது பற்றி ஹதீஸ்களில்வந்துள்ளது. ஆஷுரா என்ற வார்த்தைக்கு  பத்தாம் நாளின் இரவு என்றுதான் பொருள். (ஃபத்ஹுல் பாரி) 

அதற்காக இரவில் நோன்பு வைக்க வேண்டும், என்று சொல்லமுடியுமா?பத்தாம் நாள் என்றால் ஏதாவது மாதத்தின் பத்தாவது நாளில் நோன்பு வைக்க முடியுமா? முஹர்ரம் மாதத்தின்10 ம் நாளுக்குத் தான் ஆஷுரா என்று சொல்லப்படும். ஷரீஅத்தில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளுக்கு அகராதியில் மட்டும் பொருள் தேடாமல் நபி யவர்களும் நபித்தோழர்களும் எப்படி பொருள் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். 

சவூதியிலோ மற்ற பாகங்களிலோ 10 ம் நாளாக இருக்கும் போது நாமும் நோன்பு நோற்றுவிட முடியுமா?

நபியவர்கள் அய்யாமுல் பீள் நாட்களில்13, 14, 15 ம் நாட்களில் நோன்பு வைத்திருக்கிறார்கள். அய்யாமுல் பீள் என்றால் வெண்மை நாட்கள் என்று பொருள். அது எந்தெந்த நாட்கள் என்பதை நாமாக முடிவு செய்திட முடியாது.

பெருநாளன்று தொழும் தொழுகை பற்றி நபிமொழிகளில் வரும் போது ஈதுடைய தொழுகை (ஈதுல் ஃபித்ர், ஈதுல் அள்ஹா) என்று வருகிறது. ஷவ்வால் முதல் நாள் தொழுகை என்றோ துல்ஹஜ் பத்தாம் நாளுடைய தொழுகை என்றோ வரவில்லை. ஷவ்வால் முதல் நாள் தான் பெருநாள் கொண்டாடுகிறோம். உலகில் எங்காவது ஈதுல் ஃபித்ர் கொண்டாடிவிட்டால் நாமும் பெருநாள் தொழுகை தொழுதிட முடியுமா?

அவ்வாறே அரஃபாவுடைய நாள் என்பது ஹாஜிகள் அரஃபாவில் இருக்கும் நாள் என்று மட்டும் பொருள்கொண்டுவிட முடியாது. ஹாஜிகள் எந்த அடிப்படையில் அரஃபாவில் தங்குகிறார்கள். அவர்களாக ஒரு நாளை முடிவு செய்து தங்கிவிடுகிறார்களா? இல்லையே?துல்ஹஜ் 9 ம் நாளைத்தான் அரஃபாவில் தங்கும் நாளாக சவூதி அரசு அறிவிக்கிறது.

ஆஷூரா என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளுக்கு பெயர் என்பது போல் யவ்மு அரஃபா என்பது துல்ஹஜ் 9 ம் நாளுக்குதான் பெயர். ஹாஜிகள் தங்கும் நாளுக்குப் பெயர் அல்ல. ஹாஜிகள் அரஃபாவில் தங்கும் போது தான் அரஃபா நோன்பு வைக்க வ்ேணடும், என்பது நாமாக கூறிக்கொள்ளும் விளக்கம் தானே தவிர நபிமொழிகளில் அவ்வாறு கூறப்பட வில்லை. ஹாஜிகள் தங்கும்போது தான் நாம் நோன்பு வைக்க வேண்டும், என்று கூறினால் அதன்படி முழுஉலகிலும் செயல்படுவதற்கு சாத்தியமே இல்லை. இஸ்லாம் அப்படியொரு சட்டத்தை இயற்றாது.

யவ்முந்நஹர் - அறுக்கும் நாள் என்றும் ஹதீஸ்களில் வருகிறது. நபி (ஸல்) அவர்கள் யவ்முந்நஹóர் அறுக்கும் நாளில் (ஹஜ்ஜுப் பெருநாள் அன்று) பெருநாள் தொழுகை தொழுதார்கள். பிறகு குர்பானி கொடுக்கும் படி கூறினார்கள். 

யவ்முந்நஹóர் அறுக்கும் நாள் என்றால் துல்ஹஜ் பத்தாம் நாள் என்று தான் பொருள். ஹாஜிகள் அரஃபாவுக்கு மறுநாள் தங்களுடைய பிராணிகளை அறுக்கிறார்கள், என்பதற்காக அது தான் யவ்முந்நஹóர். நாமும் அந்த தினத்தில் தான் அறுக்க வேண்டும்,என்று சொல்லமுடியுமா?  சவூதயை விட நமக்கு ஒரு நாள் தாமதாமானால் நம்முடைய பெருநாளைக்கு முன்பு அறுக்கப்பட்ட குர்பானியே கூடாது

Saturday, 1 June 2019

மகத்தான லைலத்துல் கத்ர்இரவு

*மகத்தான இரவு புனித “லைலதுல் கத்ர்”*

லைலதுல் கத்ர் இன்ன இரவுதான் என்பதில்  ஏராளமான கருத்து வேறுபாடுகள் கூறப்பட்டுள்ளன. அது ஆண்டில் ஓர் இரவென்றும், பராஅத் இரவென்றும், றமழானில் ஓர் இரவென்றும், றமழான் 27ம் இரவு என்றும் பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் நம்பிக்கையான  சொல் றமழான் இருபதுக்கு மேல் ஒற்றைப்படையாக வரும்  நாட்களில் உள்ள  இரவுகளில்  ஒரு இரவென்றும், கூறப்பட்டிருப்பதால் றமழான் மாதத்தின்  கடைசிப்பத்து நாட்களும்  இஃதிகாப் இருப்பது மிக சிறப்பானதாகும்.

கீழ் வரும் ஹதீஸ்கள் லைலதுல் கத்ர் சம்பந்தமாக ஸஹீஹான அறிவிப்புகள் ஊடாக இடம் பெற்ற ஹதீஸ்களாகும்….

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رِجَالًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أُرُوا لَيْلَةَ القَدْرِ فِي المَنَامِ فِي السَّبْعِ الأَوَاخِرِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأَتْ فِي السَّبْعِ الأَوَاخِرِ، فَمَنْ كَانَ مُتَحَرِّيهَا فَلْيَتَحَرَّهَا فِي السَّبْعِ الأَوَاخر
நபித்தோழர்களில் சிலருக்கு, (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர்(இரவு) காட்டப்பட்டது; அப்போது, நபி(ஸல்) அவர்கள் ‘உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாள்களில் (லைலத்துல் கத்ரைக் கண்ட விஷயத்தில்) ஒத்து அமைந்திருப்பதை காண்கிறேன்! எனவே, அதைத் தேடுபவர். (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் அதைத் தேடட்டும்!” என்று கூறினார்கள்.

நூல் : புகாரி ஷரீப் ,  அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரலி) அவர்கள்.

2016 – حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: سَأَلْتُ أَبَا سَعِيدٍ، وَكَانَ لِي صَدِيقًا فَقَالَ: اعْتَكَفْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ العَشْرَ الأَوْسَطَ مِنْ رَمَضَانَ، فَخَرَجَ صَبِيحَةَ عِشْرِينَ فَخَطَبَنَا، وَقَالَ: «إِنِّي أُرِيتُ لَيْلَةَ القَدْرِ، ثُمَّ أُنْسِيتُهَا – أَوْ نُسِّيتُهَا – فَالْتَمِسُوهَا فِي العَشْرِ الأَوَاخِرِ فِي الوَتْرِ، وَإِنِّي رَأَيْتُ أَنِّي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ، فَمَنْ كَانَ اعْتَكَفَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلْيَرْجِعْ»، فَرَجَعْنَا وَمَا نَرَى فِي السَّمَاءِ قَزَعَةً، فَجَاءَتْ سَحَابَةٌ فَمَطَرَتْ حَتَّى سَالَ سَقْفُ المَسْجِدِ، وَكَانَ مِنْ جَرِيدِ النَّخْلِ، وَأُقِيمَتِ الصَّلاَةُ، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْجُدُ فِي المَاءِ وَالطِّينِ، حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ فِي جَبْهَتِهِ
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப்பக்கத்தில் இஃதிகாஃப் இருந்தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) ‘எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது; பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே, நீங்கள் கடைசிப்பத்து நாள்களின் ஒற்றைப் படை இரவுகளில் அதைத் தேடுங்கள்! நான் (லைலத்துல் கத்ரில்) ஈரமான களி மண்ணில் ஸஜ்தா செய்வது போல் (கனவு) கண்டேன்! எனவே, யார் என்னோடு இஃதிகாஃப் இருந்தாரோ அவர் திரும்பவும் வரட்டும்!” என்றார்கள். நாங்கள் திரும்பச் சென்றோம். வானத்தில் ஒரு மெல்லிய மேகப் பொதியைக் கூட அப்போது நாங்கள் காணவில்லை. திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை பொழிந்தது. அதனால், பள்ளிவாசலின் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அந்தக் கூரை பேரீச்சை மட்டையிலினால் அமைந்திருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் நபி(ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்யும் நிலையில் கண்டேன். அவர்களின் நெற்றியில் களிமண்ணின் அடையாளத்தை பார்த்தேன்.

நூல் : புகாரி ஷரீப் ,  அறிவிப்பாளர் : அபூ ஸயீத்(ரலி) அவர்கள்.

2017 – حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا أَبُو سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «تَحَرَّوْا لَيْلَةَ القَدْرِ فِي الوِتْرِ، مِنَ العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ
“ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!” என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி ஷரீப் ,  அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) அவர்கள்.

2020 – حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُجَاوِرُ فِي العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ وَيَقُولُ: «تَحَرَّوْا لَيْلَةَ القَدْرِ فِي العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ
நூல் : புகாரி ஷரீப் ,  அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) அவர்கள்.

நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; ‘ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!” எனக் கூறுவார்கள்.

நூல் : புகாரி ஷரீப் ,  அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) அவர்கள்.

2021 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «التَمِسُوهَا فِي العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ لَيْلَةَ القَدْرِ، فِي تَاسِعَةٍ تَبْقَى، فِي سَابِعَةٍ تَبْقَى، فِي خَامِسَةٍ تَبْقَى» تَابَعَهُ عَبْدُ الوَهَّابِ، عَنْ أَيُّوبَ
“ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்! ‘லைலத்துல் கத்ரை இருபத்தொன்றாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில் தேடுங்கள்!” நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி ஷரீப் ,  அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

2022 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ أَبِي مِجْلَزٍ، وَعِكْرِمَةَ، قَالَ: ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هِيَ فِي العَشْرِ الأَوَاخِرِ، هِيَ فِي تِسْعٍ يَمْضِينَ، أَوْ فِي سَبْعٍ يَبْقَيْنَ» يَعْنِي لَيْلَةَ القَدْرِ، وَعَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ التَمِسُوا فِي أَرْبَعٍ وَعِشْرِينَ
“லைலத்துல் கத்ர் இரவு கடைசிப் பத்து நாள்களில் உள்ளது; அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ உள்ளது!” என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி ஷரீப் , அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

“இருபத்து நான்காவது இரவில் அதைத் தேடுங்கள்!” என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்கள்.

லைலதுல் கத்ரு இரவின் சிறப்பு அது அல்லாத மற்ற ஆயிரம் மாதங்களைவிட  மேலானதாகும். அதாவது அந்த ஓர் இரவு முப்பதினாயிரம் நாட்களைவிட  மேலானதாகும். இரவு என்பது ஒரு நாளில் பாதியாக இருப்பதால் முப்பதினாயிரம் நாட்களை இரண்டாக  ஆக்கி கணக்கிட்டால் அறுபதினாயிரம்  இரவுகளைவிட மேலானது  என்பது  தெரியவருகின்றது.

இமாம் கஸ்ஸாலி றஹ் அவர்களும், மற்றும் இமாம்கள் சிலரும் கூறியுள்ளதாவது றமழானின் முதற் பிறை ஞாயிறு அல்லது புதன் கிழமையாயிருந்தால் லைலதுல் கத்ர் இருபத்து ஒன்பதாம் இரவு என்பதாகவும், முதற்பிறை திங்கட்கிழமையாயிருந்தால் லைலதுல் கத்ர் இருபத்து ஒன்றாம் இரவு என்பதாகவும்,செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையாயிருந்தால் லைலதுல் கத்ர் இரபத்து ஏழாம் இரவென்றும், வியாழக்கிழமையாயிருந்தால்  இருபத்தைந்தாம் இரவென்றும், சனிக்கிழமையாய் இருந்தால்  இருபத்தி மூன்றாம் இரவென்றும் கூறியுள்ளார்கள்.

இந்தக்கணக்குப்படி  நான் பருவமடைந்த நாள் முதல் எனக்கு  லைலதுல் கத்ர் தவறியதே கிடையாது என்று ஷைகு அபுல் ஹஸன் ஜுர்ஜானி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

ومنها ما قال ابن عباس ايضا ليلة القدر تسعة أحرف وهو مذكور فى هذه السورة ثلاث مرات فتكون السابعة والعشرين
லைலதுல் கத்ரைப்பற்றி கூறப்பட்டுள்ள “இன்னா அன்ஜல்னா” சூறாவில் லைலதுல் கத்ரு என்ற வார்த்தை மூன்று தடவைகள் கூறப்பட்டுள்ளன. ஒருவார்த்தையில் ஒன்பது எழுத்துக்கள் வீதம்  மூன்று தடவைக்கு இருபத்து ஏழு எழுத்துக்கள் ஆகின்றன. ஆகவே இருபத்தேழாம் இரவுதான் லைலதுல் கத்ர் என்று சிலர் கூறியுள்ளனர். மேற்படி கருத்தானது தப்ஸீர் கலை மேதை இப்னு அப்பாஸ் றழி அவர்களின் கருத்தாகுமென இஸ்மாயீல் ஹக்கீ றஹ் அவர்கள் தங்களின் விளக்கவுரையில் கூறிக்காட்டுகின்றார்கள்.

இவ்வாறு சில காரியங்களில் இமாம்கள் சில எழுத்துக்களின் எண்ணிக்கைக்குத் தோதாக விடயங்களைக் கூறியிருப்பது அறிவுக்குப் பொருத்தமாகவும் அமைந்துள்ளது.

லைலதுல் கத்ருடைய இரவுக்கு சில அடையாளங்கள் ஹதீஸில் கூறப்பட்டுள்ளன. அவை அன்றைய இரவில் நட்ஷத்திரம் எரிந்து விழாது, நாய் குரைக்காது, சூடும் குளிர்ச்சியும் இல்லாமல் மிதமான  தன்மையாக இருக்கும், அன்று சூரியன் உதிக்கும்  போது சுடர் அதிகமின்றி பிறையைப் போல் இருக்கும் மேலும் ஷைதான் வெளியில் வரமாட்டான் என்றும் கூறப்பட்டுள்ளன.

லைலதுல் கத்ரு இரவில் தறாவீஹுக்குப் பின் இரவு முழுவதும்  அல்லது முடிந்தளவு திக்ரு, கிறாஅத்,தஸ்பீஹ், ஆகியவற்றில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

றமழான் மாதம் முதல் பத்தில்  “அல்லாஹும்மர் ஹம்னீ “ என்று அல்லாஹ்வின் றஹ்மத்தையும்,

“அல்லாஹும்மக் பிர்லீ” என்று நடுப்பத்தில் அவனது பாவமன்னிப்பையும்,

“அல்லாஹும்மஃதிக்னீ மினன்னார்” என்று நரக விடுதலையையும் கேட்பது சுன்னத்தாகும்.

மேலும் லைலதுல் கத்ருடைய இரவிலும் மற்ற நாட்களிலும் பின்வரும் துஆவை அதிகமாக ஓதுவதும் சுன்னத்தாகும்.

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي»
யா அல்லாஹ் நிச்சயமாக நீ மன்னிப்பவன்! நீ மன்னிப்பை விரும்புகின்றாய்; ஆகையால் என்னை மன்னித்தருள்வாயாக!

Thursday, 7 March 2019

நான் இல்லை அவனே

اِنْ تَغَيَّبْتُ بَدَا ⚘ وَاِنْ بَدَا غَيَّبَنِيْ

قاله الشيخ الأكبر محي الدين ابن عربي قدّس سِرُّه،

நான் மறைந்தால் அவன் வெளியாவான்.
அவன் வெளியானால் என்னை மறைத்து விடுவான்.

இது முஹ்யித்தீன் இப்னு அறபீ குத்திஸ ஸிர்றுஹு அவர்கள் கூறிய தத்துவம்.

     ஒரு மனிதனிடம் “நான்” என்ற உணர்வு இருக்கும் வரை அவன் அல்லாஹ்வை அடையவும் முடியாது, அவனைக் காணவும் முடியாது.

       ஒரு மனிதனிடமிருந்து எப்போது “நான்” என்ற உணர்வு இல்லாமற் போகின்றதோ அப்போதுதான் அவன் தான் யாரென்று உணர்ந்து கொள்வான்.

  “அன்னிய்யத்” என்றால் நான் என்ற உணர்வு “அனானிய்யத்” என்றால் நான் என்ற மமதை “அனானிய்யத் என்ற மமதை நற்பண்புள்ளவர்களிடம் இருக்காது. ஆயினும் இது தீக் குணமுள்ளவர்களிடம் இருக்கும்.

    “அன்னிய்யத்” நான் என்ற உணர்வு “நப்ஸை” அறுத்தெறிந்தவர்கள் தவிர மற்றவர்களிடம் நிச்சயமாக இருக்கும். இதை அகற்றுவதும் மிகக் கடினம்.

     அல்லாஹ்வை அடைய விரும்பும் ஒருவன் மேற்கண்ட இரண்டு நச்சுப் பாம்புகளையும் கொன்றொழித்தால் மட்டுமே அவன் அல்லாஹ்வை அடைவதற்கு தகுதி பெற்றவனாவான்.

      நானறிந்த வரை இதற்கு கை கண்ட மருந்து ஒரு ஞான குருவிடம் “பைஅத்” பெற்றுக் கொள்வது தவிர வேறு வழியில்லை. இது எனது அனுபவம்.

         ஒரு இன்ஸான் – மனிதன் – “கமாலிய்யத்” பூரணத்துவம் பெற்ற ஒரு ஞான குருவின் கரம் பற்றி அவர் கூறும் விதிகளைப் பேணி ஆன்மீக வழி நடந்தால் அவனிலுள்ள “அன்னிய்யத்” என்ற நான் எனும் உணர்வு படிப்படியாக குறைந்து முழுமையாக இல்லாமற் போகுமிடத்து அவன் ஆன்மீகத்தில் சுட்டிக்காட்டக் கூடிய ஓர் இடத்தை அடைந்து விடுகிறான்.

    அவன் தன்னுணர்வை முற்றாக இழந்ததும் அவன் நினைக்காமலேயே அவனிடம் வளர்ந்து வந்திருந்த “நான்” என்ற உணர்வு இருக்க வேண்டிய இடத்தில் “அவன்” என்ற உணர்வு  - அல்லாஹ் என்ற உணர்வு – ஆட்சி பீடத்தில் அமர்ந்து விடும்.

       இவன் மறைந்தான். அவன் வெளியானான். மறைந்தவன் என்றால் மரணித்தவன் என்றே விளக்கம் வரும். “அப்து” என்ற அடிமை மரணித்தால் அந்த அடிமையின் ஆட்சிக் கதிரையில் “றப்பு” என்ற எஜமான் அமர்ந்து விடுவான்.

இதுவே “அடிமை மறைய எஜமான் உதிப்பான்” என்ற தத்துவத்தின் கருத்தாகும்.

         “இன்ஸான்” மனிதன் தன்னுணர்வை இழந்துவிட்டால், இவன் இறந்து விட்டால் – “இன்ஸான்” என்ற பாத்திரம் – “மள்ஹர்” மூலம் செயல் வெளியானாலும் அது அல்லாஹ்வின் செயலென்றே கணிக்கப்படும்.

     ஒருவன் “நான்” என்ற தன்னுணர்வை இழந்த நிலையில் “அனல் ஹக்கு” நான் அல்லாஹ் என்றே அவன் சொல்வான். ஆயினும் அவ்வாறு அவன் சொன்னது அவனுக்கே தெரியாமலிருக்கும். அவனில்லை எனும் போது அவன் சொன்னான் என்பதும் தவறுதான். “அனல்ஹக்கு” நான் அல்லாஹ் என்று சொன்னவன் அல்லாஹ் தானேயன்றி மனிதனல்ல. ஒரு மனிதன் தான் அல்லாஹ் என்று சொன்னால் தான் “ஷரீஅத்” என்ற வாள் அவனின் கழுத்தை துண்டாக்கும். ஆயினும் அல்லாஹ் நான் அல்லாஹ் என்று சொன்னால் எவ்வாறு “ஷரீஅத்” அவனைக் கொல்லும்?!

      இதனால்தான் “மன்சூர் ஹல்லாஜ்” என்பவர் “அனல் ஹக்கு” என்று சொன்னவேளை – “ஹல்லாஜ்” என்ற ஒலிபெருக்கி மூலம் ஹக் தஆலா அவ்வாறு சொன்ன வேளை – அவரை  வெட்டிய நேரம் நான் இருந்திருந்தால் அவரை வெட்டுவதற்கு விட்டிருக்கமாட்டேன் என்று “ஹுஜ்ஜதுல் இஸ்லாம்” இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்களும், வலீகட்கரசர் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் றஹிமஹுல்லாஹ் அவர்களும் கூறியுள்ளார்கள். இவர்கள் இருவரும் “ஷரீஆ”விற்கு முரணாகவா சொல்லிவிட்டார்கள்?

      இதை வாசிக்கும் நேயருக்கு ஒரு கேள்வி ஏற்படலாம். அதாவது “ஹல்லாஜ்” அவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று “பத்வா” தீர்ப்பு வழங்கியவர்கள் ஏன் அவ்வாறு வழங்கினார்கள்?

      இதற்கு சுருக்கமான விடை சொல்வதாயின் அவ்வாறு “பத்வா” வழங்கியவர்கள் உலமாஉகளாயிருந்தாலும் கூட அது “ஹல்லாஜ்” மீது அவர்களுக்கு ஏற்பட்ட பொறாமையின் பிரதிபலிப்பென்றே கூற வேண்டும்.        ஏனெனில் உலமாக்கள் வழங்கிய “பத்வா”வில் இந்நிகழ்வு நடந்த காலப்பகுதியில் “பக்தாத்” நகரின் அறிவுக் கண்ணாயும், “ஸெய்யிதுத்தாயிபா” ஸுபிகளின் தலைவராகவும் விளங்கிய ஜுனைத் றஹிமஹுல்லாஹ் அவர்களின் கையெழுத்து அந்த “பத்வா”வில் இருக்க வில்லை.

    குறித்த அந்த “பத்வா” அரசனால் ஆறு தரம் ஜுனைத் றஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தும் கூட அவர்கள் கையெழுத்திட வில்லை. ஏழாவது தரம் அனுப்பிவைக்கப்பட பிறகுதான் கையெழுத்திட்டார்கள்.

     ஜுனைத் றஹிமஹுல்லாஹ் அவர்களின் இந்த நடவடிக்கை அவர்கள் அந்த “பத்வா”வை சரி காண வில்லை என்பதற்கு ஓர் ஆதாரமாகும்.

     அக்காலப்பகுதியில் வாழ்ந்து அவரைக் கொலை செய்ய வேண்டும் என்று “பத்வா” வழங்கியவர்கள் பொறாமையினால் அவ்வாறு வழங்கவில்லை என்று யாராவது சொன்னால் அதை நாம் ஏற்றுக் கொண்டு அவ்வாறாயின் அவர்கள் அவ்வாறு “பத்வா” வழங்கியதற்கான காரணம் என்ன? என்று சமாளிப்பவர்களிடம் கேட்போம்.

     அதற்கவர்கள் “ஹல்லாஜ்” சொன்னது பிழை என்பதினால்தான் அவ்வாறு “பத்வா” வழங்கினார்கள் என்று சமாளிப்பவர்கள் கதை சொன்னால் அவ்வாறாயின் அந்த “பத்வா”வில் ஆறுதரம் கையெழுத்திட ஜுனைத் றஹிமஹுல்லாஹ் ஏன் மறுத்தார்கள்? என்று அவர்களிடம் கேட்போம்.

    ஆறுதரம் மறுத்தாலும் கூட ஏழாவது தரத்தில் கையொப்பமிட்டார்கள் தானே என்று அவர்கள் கூறினால் ஏழாவது தரத்தில் ஜுனைத் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கையொப்பமிட்டாலும் கூட அப்போது  அவர்கள் தங்களின் “ஸுபீ” உடையை கழட்டி வைத்து விட்டு ஒப்பமிட்டதேன்? என்று சமாளிப்பவர்களிடம் கேட்போம்.

      இங்கு ஏதோ ஓர் இரகசியம் இருக்க வேண்டும். அது எதுவென்று இங்கு நான் எழுத விரும்பினாற் கூட போலி அறிஞர்களின் வாள் என் கழுத்தை கொய்து விடுமென்று அஞ்சுகிறேன்.

     ஆனால் ஒன்றை இங்கு எழுதாமலிருக்க என்னால் முடியவில்லை. ஆய்வாளர்கள் நடு நிலையில் நின்று ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஜுனைத் றஹிமஹுல்லாஹ் அவர்கள் எந்த சூழ்நிலையில் ஒப்பமிட்டுள்ளார்கள் என்பதை அறிய முடியாதுள்ளது.

       நான் எனது நண்பர்கள் இருவருடன் “பக்தாத்” சென்று இமாம் ஜுனைத் றஹிமஹுல்லாஹ் அவர்களின் சமாதிக்கு முன்னால் நின்ற போது இமாம் ஹல்லாஜ் அவர்களைக் கொலை செய்வதற்கு நீங்கள் ஏன் ஒப்பமிட்டீர்கள்? என்று கேட்டேன். எனக்கு பதில் கிடைக்க வில்லை. இந்தப் பாவிக்கு எவ்வாறு பதில் சொல்வார்கள்? என்று என்னை நானே இழிந்துரைத்தவனாக மனக் குழப்பத்துடன் “ஸலாம்” கூறி மன்னிப்பும் கேட்டுக் கொண்டேன். ஜுனைத் நாயகம் அவர்களின் காற்பாதம் என் தலைமேல் வைக்கிறேன். அவர்களின் செருப்பை கழுவிக் குடிப்பதற்குக் கூட நான் தகுதியற்றவன்தான். எனினும் அவர்கள் ஒப்பமிட்டதை என்மனம் நூறு வீதம் ஏற்றுக் கொள்ள வில்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.

المقتول بسيف فتوى العُميان