Sunday, 11 July 2021

திருமண வாழ்த்து

வாழ்த்துக்கும் சாபத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் அலையும் கூட்டம்  ஒருவர் மணமக்களை நபிமார்களைப்போல் வாழுங்கள் என்று வாழ்த்துகின்றார் என்றால் நபியாக வாழ்வது அல்ல நபி வாழ்ந்த வழியாக வாழ்வது தான் வாழ்த்து ஏன் நபிமார்களுக்கு நல்ல வாழ்க்கை மகிழ்வான வாழ்க்கை அவர்களுக்கு கிடைக்கவே கிடைத்திருக்காதா? கஷ்டங்கள் துயரங்கள் இன்பங்கள் இவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பதை விளக்க நபிமார்களின் வாழ்க்கையில் படிப்பினை இருக்கிறது என்று இறைவன் கூறவில்லையா? நபிமார்களைப்போல் வாழ்க என்று இறைவனிடம் துஆ கேட்டால் நபிமார்கள் பட்ட கஷ்டத்தை தான் இந்த மணமக்களுக்கு கொடுப்பான் என்று இறைவன் மீதே அவநம்பிக்கை கொள்கிறீர்களா?இறைவன் நபிமார்கள் வாழ்ந்த நன்மைகள் நல்வாழ்க்கை  இறைவன் மீது நபிமார்கள் காட்டிய ஈமானின் உறுதி இவைகளை இந்த மணமக்களுக்கு தருவான் என்று உறுதியான ஈமான் நமக்கு இல்லையா? பூமியில் குழப்பம் செய்வதுதான் நம் வேளையா? நாம் மணமக்களுக்கு துஆ செய்கிறோமா? சாபமிடுகிறோமா? இது எல்லாம் இறைவனுக்கு தெரியாது என்ற எண்ணமா?وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَيَعْقُوْبَ‌ كُلًّا هَدَيْنَا ‌ وَنُوْحًا هَدَيْنَا مِنْ قَبْلُ‌ وَمِنْ ذُرِّيَّتِهٖ دَاوٗدَ وَسُلَيْمٰنَ وَاَيُّوْبَ وَيُوْسُفَ وَمُوْسٰى وَ هٰرُوْنَ‌ وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَۙ‏
நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
(அல்குர்ஆன் : 6:84)

Wednesday, 26 May 2021

தொற்று நோய் கொரோனா வைரஸ் நோய் (COVID-19)



இஸ்லாத்தில் தொற்று நோய் உண்டா?

இஸ்லாத்தில் தொற்று நோய் உண்டா? உலக நாடுகளைப் பீதியில் ஆழ்த்தும் பறவைக் காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்று நோய் தானே?
பறவைக் காய்ச்சல் மட்டுமல்லாது பல்வேறு நோய்களுக்குக் காரணமான வைரஸ்கள் கொரோனா காற்றிலோ, தண்ணீர் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ பரவுவது அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தொற்று நோய் கிடையாது. ஸஃபர் பீடை கிடையாது. ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது” என்று கூறினார்கள்.

அப்போது கிராமவாசி ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித்) திரியும் என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றுக்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கி விடுகின்றனவே! அவற்றின் நிலை என்ன?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் முதல் ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?” என்று திருப்பிக் கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5717

இந்த ஹதீஸில் தொற்று நோய் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் ஒரு ஒட்டகத்திலிருந்து மற்றொரு ஒட்டகத்திற்கு சிரங்கு தொற்றிக் கொள்வதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த ஒரு கிராமவாசி அது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேள்வி எழுப்புகின்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அளிக்கும் பதில் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

முதல் ஒட்டகத்திற்கு அந்த நோயைத் தந்தவன் யார்? என்ற வாதத்தை நபி (ஸல்) அவர்கள் முன் வைக்கின்றார்கள்.

இதன் மூலம் தொற்று நோய் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் ஒரேயடியாக மறுக்காமல், தொற்று நோயைக் காரணம் காட்டி, இறைவனுடைய விதியை மறுத்து விடக் கூடாது என்பதை உணர்த்துகின்றார்கள்.

ஒருவருக்கு நோய் ஏற்படுகின்றது என்றால் அது இறைவனின் நாட்டப்படியே ஏற்படுகின்றது என்ற நம்பிக்கை வேண்டும். இவருடைய கண்ணைப் பார்த்ததால் தான் எனக்குக் கண் வலி வந்து விட்டது என்று கூறுவது இறைவனின் விதியை மறுப்பதைப் போன்றதாகும். இதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் உணர்த்துகின்றதே தவிர தொற்று நோய் அறவே கிடையாது என்று கூறவில்லை.

தொற்று நோய் உண்டு என்ற கருத்தில் அமைந்த பல்வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் இதை வலியுறுத்துகின்றன.

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். சர்க் எனும் இடத்தை அடைந்த போது, படைத் தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி)யைச் சந்தித்து, ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள், “ஷாம் நாட்டிற்குப் போகலாமா?” என்று ஆரம்ப கால முஹாஜிர்களை அழைத்து, கருத்துக் கேட்ட போது முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிலர் போகலாம் என்றும் சிலர் வேண்டாம் என்றும் பதிலளித்தார்கள். பிறகு அன்சாரிகளை அழைத்துக் கருத்து கேட்டார்கள். அவர்களிடமும் இது விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பிறகு மக்கா வெற்றி கொள்ளப் பட்ட ஆண்டில் ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களை அழைத்து கருத்துக் கேட்டார்கள். அவர்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கருத்து வேறுபாடின்றி தெரிவித்தனர். ஆகவே உமர் (ரலி) அவர்கள் திரும்பிச் செல்வதென முடிவு எடுத்தார்கள்.

அப்போது தமது தேவை ஒன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அங்கு வந்தார்கள். அவர்கள், “இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் ஏற்பட்டால் அதிலிருந்து வெருண்டோடு வதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்’ என்று சொல்ல நான் கேட்டேன்” என்று கூறினார்கள். (சுருக்கம்)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி  5279

கொள்ளை நோய் ஏற்பட்டுள்ள ஊருக்குச் செல்ல வேண்டாம் என்றும், அந்த ஊரில் இருப்பவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என்றும் இந்த ஹதீஸ் கூறுகின்றது. தொற்று நோய் இல்லை என்றால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கட்டளையிடத் தேவையில்லை. எனவே தொற்று நோய் உண்டு என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

கிருமிகள் மூலமாக நோய் தொற்றிக் கொள்வதை இஸ்லாம் மறுக்கவில்லை. அதே சமயம், இறைவனின் நாட்டப்படியே அந்த நோய் பரவியது என்பதையும் மறுக்கக் கூடாது.
 தன்னுடைய கை மற்றும் நாவின் மூலம் (ஏற்படும் தீங்குகளை விட்டும்) சக முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்றால் தான் அவர் உண்மை முஸ்லிமாக முடியும், என்றும் (யாரும் யாருக்கும்) தீங்கிழைப்பதோ பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சிரமம் கொடுப்பதோ கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் உபதேசித்துள்ளார்கள்.

இந்த நபி மொழியிலிருந்து ஏராளமான மார்க்க சட்டங்களை  வல்லுணர்கள் கூறியுள்ளனர். எந்த ஒரு தனி நபரும் மற்றவர்களுடைய ஆரோக்கியத்திற்கு எந்தப் பங்கமும் ஏற்படுத்தக்கூடாது. (அல்லாஹ்வின் நாட்டப்படி) நோயாளியின் கிருமி மற்றவர்களுக்கு தொற்றும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது. அப்படிப்பட்ட நபர், ரொட்டி மாஸ்டராகவோ பொது சந்தையில் விற்பனையாளராகவோ இருக்கக்கூடாது. இது போன்ற விதிமுறைகளை இந்த நபி மொழி நமக்கு சொல்லித்தருகிறது. நபி (ஸல்) அவர்களே தும்மினால் கூட உம்மத்தின் படிப்பினைக்காக கையையோ அல்லது துணியையோ வாயருகில் வைத்துக்கொள்வார்கள். தும்மலின் சப்தத்தை தாழ்த்திக் கொள்வார்கள்.(அபூதாவூத் 4374)

நபி (ஸல்) அவர்ளுடைய எச்சிலை பரக்கத்தாக நினைக்கும் நபித்தோழர்கள் முன்னால் இருக்கும் போது கூட நபி (ஸல்) அவர்கள் தும்மல் நீர் யார் மேலும் பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள். காலரா, சிறிய பெரிய அம்மை , (கொரோனா ) போன்ற கொடிய நோய் ஓர் ஊரில் பரவலாக இருந்தால் அந்த ஊருக்கு நீங்கள் வராதீர்கள். நீங்ள் அந்த ஊரில் இருந்தால் அவ்வூரை விட்டும் வெளியேறாதீர்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இந்த நபி மொழி, ஒரு நோயாளி மற்றவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக எப்படி நடந்து கொள்ளவேண்டும், என்பது பற்றியும் மற்றவர்கள் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும், என்பது பற்றியும் அழகான வழிகாட்டுதலை கொடுக்கிறது. தொற்று நோயின் மீது ஈமான் கொள்ளக்கூடாது. எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் நடக்கிறது.

இந்த உலகம் காரணங்களின் அடிப்படையில் இயங்குகிறது. எனவே நோய்க்கிருமி ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு சென்றுவிட்டால் அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் அவருக்கும் அதே நோய் வர வாய்ப்பிருக்கிறது. எனவே அந்த ஊருக்கு செல்லாமல் அந்த நோய் வராமல் தற்காத்துக் கொள்ளவேண்டும். இதனால் தொற்று நோயின் மீது ஈமான் கொள்வதை விட்டும் தப்பிக்க முடியும்.

ஜாஹிலிய்யா (மௌட்டீக) காலத்தில் இந்த விஞ்ஞான அறிவெல்லாம் கிடையாது. ஏகத்துவத்துக்கு முரணாக பல இணைவைப்பு கொள்கைகளை நம்பியிருந்தது போல் தொற்று வியாதியையும் நம்பியிருந்தனர். அந்த நம்பிக்கையை உடைத்தெறிவதற்காகவே தொற்று வியாதி என்பதே கிடையாது என்று நபி (ஸல்) வலியுறுத்தினார்கள்.

தற்காலத்திலும் அது போன்றதொரு நம்பிக்கை இருந்தால் தொற்று நோய் இல்லை என்று அழுத்தமாகச் சொல்லவேண்டும். வியாதி பாதித்த ஊரில் இருப்பவர் ஆரோக்கியமானவராக இருந்தாலும் அந்த ஊரை விட்டும் வெளியே செல்லவேண்டாம், என்று நபி (ஸல்) அறிவுறுத்தியிருப்பது தூர நோக்கு சிந்தனை மிக்கது என்பது மட்டுமல்ல; 19-ம் நூற்றாண்டின் கடைசியில் கண்டுபிடிக்கப்பட்ட நவீன மருத்துவக் கொள்கையை 6-ம் நூற்றாண்டிலேயே நபி (ஸல்) அவர்கள் உலகுக்கு அறிவித்துள்ளார்கள்.

அதாவது, நோயால் பாதிக்கப்பட்ட ஊரில் ஒருவர் வெளிப்படையாக ஆரோக்கியமாக தோன்றினாலும் அவருடைய உடலில் நோய்க்கிருமிகள் நுழைந்திருக்கலாம். ஆனால் மருத்துவ ஆய்வின் படி அவரிடமிருந்து நோய்க்கிருமிகள் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பிருக்கிறது. அல்லது அவருக்கு சில நாட்களுக்குப் பின் நோயின் அறிகுறி தென்படலாம். சில நோய்க்கிருமிகள் இரண்டு நாட்களிலேயே உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இன்னும் சில நோய்க்கிருமிகள் ஆறு மாதங்களுக்குப் பிறகே  உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவர், நாம் ஆரோக்கியமாகத்தானே இருக்கிறோம், என்று நினைத்து வெளியூருக்குச் சென்றால் நோயின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஊர் மக்களுக்கும் கிருமி பரவ காரணமாகிவிடுவார். (அல் அத்வா பைனத்திப்பி வஹதீஸி முஸ்தபா (ஸல்))

நோயால் பாதிக்கப்பட்ட ஒட்டகம் வைத்திருப்பவர் (ஒட்டகத்தை) ஆரோக்கியமான ஒட்டகம் இருக்கும் இடத்திற்கு கொண்டு வர வேண்டாம்என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி) நோய் நம்மைத் தொற்றிவிடாமல் இருப்பதற்காக சுற்றுச்சூழலின் தீங்கிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கும் பல போதனைகளை போதித்திருக்கிறது இஸ்லாம். (சுத்தமான காற்றை சுவாசிப்பதற்காக) நபியவர்களும் நபித்தோழர்களும் தோட்டங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். தோட்டங்களில் தொழுவதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிரியப்பட்டிருக்கிறார்கள். (திர்மிதீ)

அழுக்கு படிந்த ஆடையை அணிந்திருந்த ஒருவரைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அவரிடம் தனது ஆடையைத் துவைப்பதற்கு எதுவும் இல்லையா? என்று கடிந்து கொண்டார்கள். (மிஷ்காத்) ஒரு நாளைக்கு ஐந்து நேரத்தொழுகையைக் கடமையாக்கியது மட்டுமல்ல, ஒவ்வொரு தொழுக்கு முன்பும் உளு எனும் கை, முகம், கால்களைக் கழுவும் முறையையும் கட்டாயமாக்கியிருக்கிறது, இஸ்லாம். பல் துலக்கும் கலாச்சாரத்தை கடமையாக்காத குறையாக வலியுறுத்தியுள்ளது.

மக்களுக்கு சிரமமில்லையானால் ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்குவதை கட்டாயமாக்கியிருப்பேன், என்று முஹம்மது (ஸல்) அவர்கள் போதித்தார்கள். பல் துலக்குவது வாயைச் சுத்தப்படுத்தவது மட்டுமல்ல; இறைப் பொருத்தத்தையும் தேடித்தரும் என்று நபியவர்கள் கூறி அதையும் இறைவழிபாட்டின் வரிசையில் இணைத்தார்கள். (புகாரி – 1933)

சாப்பாட்டுக்கு முன்பு கை கழுவிக்கொள்ள வேண்டுமென்பதும் இஸ்லாம் போதிக்கும் சுகாதாரக் கொள்கைகளில் ஒன்று. உணவருந்தும் முன்பும் பின்பும் கைகழுவிக் கொள்வது சாப்பாட்டில் அபிவிருத்தியை உண்டாக்கும் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத் – 3763)

நகஇடுக்குகளில் அழுக்கு படிவதால் அது உணவருந்தும் போது அழுக்கும் உடலுக்குள் சென்று உடல்நலத்ததைக் கெடுக்கக் கூடும். எனவே, இது போன்ற காரியங்களிலும் இஸ்லாம் கவனம் செலுத்தியிருக்கிறது. நகத்தை வெட்டுவதையும் இடுக்குகளில் உள்ள முடிகளைக் கலைவைதையும் மனிதனுடைய இயல்பான காரியங்களில் உள்ளவை என்று கூறி நபியவர்கள் உடல் சுத்தத்தின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தியுள்ளார்கள். நாற்பது நாட்களுக்கு அதிகமாக அவற்றை அகற்றாமல் விட்டுவைக்கக்கூடாது, என்று காலக்கெடுவையும் கண்டிப்புடன் கூறியுள்ளார்கள். (திர்மிதி – 2758)

தண்ணீர் பாத்திரத்தை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பையைக் கட்டி வையுங்கள். தூங்கிவிழித்தால் தண்ணீர்ப் பாத்திரத்திற்குள் கைகளை நுழைப்பதற்கு முன் மூன்று முறை கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் அவனுயை கரங்கள் (அசூசையான இடங்களில்) உலாவிஇருப்பதை அவன் அறியமாட்டான் என்று கூறி தண்ணீரின் தூய்மையைப் பேணுவதில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள், நபியவர்கள். நாகரிகம் தெரியாத அந்தக் காலத்திலேயே அதிகமாக செருப்பணியுங்கள், என்று நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். (ஸஹிஹ் முஸ்லிம்)

செருப்பின் மூலம் கிருமிகளின் தாக்கத்தை விட்டும் பாதுகாப்புப் பெற முடியும். தண்ணீரில் நாய் வாய் வைத்துவிட்டால் அந்த பாத்திரத்தை ஏழுமுறை கழுவுங்கள். ஒரு முறை மண்ணால் தேய்த்து கழுவுங்கள். இவையனைத்தும் இறைத்தூதர் போதிக்கும் சுக ஆதாரங்களில் சில
 

فَاللّهُ خَيْرٌ حَافِظًا وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ -

12:64 ( பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன்,கிருபையாளர்களில் அவனே எல்லோரையும் விட மிக்க கிருபையாளன்.