Thursday, 7 March 2019

ஸூபீ

ஆத்மீக ஞானிகளைக் குறிக்க ஸூபீ எனும் சொல்லே பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல் தூய்மை எனும் பொருள் கொண்ட ஸபாஃ என்னும் சொல்லினடியாகப் பிறந்த தென்று முல்லா ஜாமீ போன்ற சிலர் கருதுகின்றனர்.

ஏனெனில் ஸூபிகள் எப்போதுமே தமது எண்ணங்களிலும் செயல்களிலும் தூய்மையையே விரும்புபவர்கள். இதனாலேயே பிஷ்ர் இப்னு அல் ஹாரித் எனும் மகான், “இறைவன் பால் தனது உள்ளத்தை தூய்மையாக வைத்திருப்பவனே “ஸூபீ” என்று கூறினார்.

வேறு சிலர் இச்சொல் வரிசை அல்லது தரம் என்னும் பொருள் கொண்ட ஸஃப் எனும் சொல்லிலிருந்து பிறந்ததென்பர். ஏனெனில் ஸூபீகள் மனிதர்களுகள் முதல் தரமானவர்கள், இறைதூதர்களுக்கு அடுத்த படித்தரத்திலுள்ளவர்கள், இறைவனுடைய பார்வையில் இவர்கள் உள்ளத்தாலும் உணர்ச்சிகளாலும் செயல்களாலும் உயர்ந்து நிற்பவர்கள்.

கம்பளி எனும் பொருள் கொண்ட ஸூப் எனும் சொல்லிலிருந்து இச் சொல் பிறந்ததாகவும் சிலர் கூறுகின்றனர். மக்களின் பொதுவான அபிப்பிராயமும் இதுவாகவே இருந்து வருகிறது. ஆரம்ப கால ஸூபிகள் முரட்டுக் கம்பளி ஆடை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இது துறவின் – ஏழ்மையின் – சின்னமாகக் கருதப்பட்டது. மேலும், கம்பளியே நபிமார்களின் ஆடையாகவும் இருந்து வந்திருக்கிறது.

”ரௌஹா நோக்கி வெறும் காலுடன் அபா என்னுமிடத்திலுள்ள மலையைக் கடந்து, எழுபது நபிமார்கள் கஃபாவை நோக்கிக் வெரும் காலுடன் அபா எனும் கம்பளி ஆடை அணிந்தவர்களாகவும் நடந்து சென்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூட கம்பளி அணிவதையும் கழுதைகளில் பயணம் செய்வதையும் (விருந்திற்காக) சாதாரண மனிதனின் அழைப்பை ஏற்றுக் கொள்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்“ என்றும் அபூ மூஸா அஷ் அரீ கூறியுள்ளார்கள்“

ஹஸன் அல் பஸ்ஸ்ரீ (ரஹ்) ”யும் நான் பத்ர் போரில் கலந்து கெண்ட நாயகத் தோழர்களை அறிவேன். அவர்கள் கம்பளியையே அணிந்தனர்“ என்று கூறிகிறார்.
இன்னும் சிலர் அஹ்லுஸ் ஸுப்பா (திண்ணைத் தோழர்கள்) என்னும் சொற்றொடரிலிருந்து இச் சொல் தோன்றியதாகக் கூறுவர் ஏனெனில் ஸூபீகளின் இயல்புகளும் செயல்களும் பெருமானாரின் திண்ணைத் தோழர்களின் இயல்புகளையும் செயல்களையுமே பெரிதும் ஒத்திருந்தன்.

திண்ணைத் தோழர்கள் எனப்படுவோர் சத்தியத்தை (ஹக்கை) அறிவதற்காக உலகையும் அதன் ஆசாபாசங்களையும் துறந்தவர்கள், ஒரு குறிப்பிட்ட இடம் என்றில்லாமல் எங்கும் அலைந்து திரிந்தவர்கள், தியானிப்பதையும் சிந்திப்பதையுமே தமது வாழ்வாகக் கொண்டவர்கள். அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அவர்களுடைய இலக்காக இருந்தனர்.
பசிக்காக உண்பதையும் மானத்தைக் காப்பதற்காக ஆடை அணிவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இவர்களைப் பற்றி அபூ ஹூறைராவும், புழாலா இப்ன் உபைத் என்பவரும் குறிப்பிடுகையில் ஒரு முறை இவர்கள் பசியால் மயங்கி வீழ்ந்தனர். இதனைக் கண்ட நாடோடி அறபிகள் இவர்களுக்கு பைத்தியம் என்று கருதி விட்டனர்“ என்று கூறுகின்றனர். இவர்களும் கம்பளி ஆடைகளையே அணிந்தனர்.
இன்னும் சிலர் ஆலு ஸூபான் எனும் சொற்றொடரிலிருந்து ஸூபீ எனும் சொல் பிறந்ததாகக் கூறுவர். குறைஷ் குலத்தின் மூதாதையாரான முழர் என்பவரின் மரபைச் சேர்ந்த ஸூபா என்பவர் அறியாமை காலத்தின் போது, பொது வாழ்விலிருந்து ஒதுங்கி இறைவனின் ஆலயமான கஃபாவில் பணி விடைகள் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். இறைவனின் திருப்தியே இவரின் இலட்சியமாக இருந்தது. இவருடைய முன்மாதிரியைப் பின்ற்றிப் பலர் இவ்வாறு தெய்வப் பணி புரிவதில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்கள் ஆலு ஸூபான் (ஸூபானின் சந்ததியினர்) என அழைக்கப்பட்டனர். இவர்களைப் போலவே ஸூபியாக்களும் பொது வாழ்விலிருந்து ஒதுங்கி இறைவனைத் தியானிப்பதிலும் அவனுக்காக ஊழியம் செய்வதிலும் ஈடுபட்டிருந்தமையால் இவர்களும் அவ்வாறு அழைக்கப்பட்டனர் என்பது அவர்களின் கருத்து.

ஸூபீ என்னும் சொல் ஸோபியா (sophia) எனும் கிரேக்கச் சொல்லிலிருந்து வந்திருக்க வேண்டும் என்று இடைக்கால அறி வியலாளரும் வரலாற்றாசியருமான அல்பி ரூனீயும், ஐரோபிய அறிஞர்களும் கூறிகின்றனர். ஸூபித்தவம் கிரேக்கத் தத்துவ ஞானத்தின் செல்வாக்கால் தோன்றிய ஒரு துறை என்று கருதும் அறிஞர்களின் பொதுவான கருத்து இதுவே ஆகும். ஸோபியா என்னும் கிரேக்கச் சொல்லுக்கு ஞானம் (wisdom) என்பது பொருள். ஆனால் இக் கருத்து, சொற்பிரப்பியல் (Etymoligically) ரீதியில் ஆராய்ச்சி செய்யும் போது ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று என்பதை அறியலாம். ஏனெனில் இச் சொல்லின் முதலெழுத்தான “சிக்மா“ (sigma) வை அறபு மொழியில் எழுதும் போது அது ஸீன் ஆகவே வரும். ஸாத் ஆக வராது. ஸூபீ எனும் அறபுச் சொல்லின் முதலெழுத்தே ஸாது ஆகும்.

இக்கருத்துக்கள் எதுவுமே ஏற்றுக் கொள்ளத் தக்கவையாகத் தெரியவில்லை. ஸூபீ எனும் சொல் ஸபா (தூய்மை) அல்லது ஸப்வா (தெரிவு) என்னும் சொல்லினடியாகப் பிறந்திருந்தால் அதன் சரியான வடிவம் ஸபவீ என இருக்க வேண்டும் ஸாப் (அணி அல்லது தரம்) என்னும் சொல்லினடியாகப் பிறந்திருந்தால் அதன் சரியான வடிவம் ஸுப்பீயா அல்லது ஸுப்பீ என இருக்க வேண்டும்.

ஆனால் ஸூபீ என்னும் சொல் ஸூப் (கம்பளி) என்னும் சொல்லிலிருந்து பிறந்திருந்தால் மட்டுமே இவ்வாறு அமையும். இலக்கண ரீதியில் பார்க்கும் போது இக் கருத்து ஒன்றே நியாயமானதாகும். ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவும் அமைந்துள்ளது. இக் கருத்தையே புகழ் பெற்ற அறபு வரலாற்றாசிரியர் இப்ன் கல்தூனும் ஆதரிக்கிறார்.
ஸுபீயைக் குறிக்க வலீ என்னும் சொல்லும் பயன்படுத்தப்படுகிறது.

வலீ என்னும் சொல்லுக்கு நெருங்கியவர் –அருகானவர்- என்பது பொருள். விலாயத் என்னும் சொல்லுக்கு அருகாமை என்பது பொருள். அல்லாஹ்வை நெருங்குவதைக் குறிக்கவே இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. வலீ என்னும் சொல் பொதுவாக, இறைவனை விசுவாசம் கொண்ட முஃமீன்களைக் குறிக்கவும், சிறப்பாக இறைவனில் தம்மை அழித்துக் கொள்வதன் மூலம் அவனை நெருங்குபவர்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இறைவன் தனது திருமறையிலே ”விசுவாசம் கொண்டவர்களே! அல்லாஹ் நெருங்கியவனாக இருக்கின்றான். மேலும் அவன் அவர்களை இருளிலிருந்து ஒளியின் பால் கொண்டு வருகின்றான்” (2.257) என்று கூறுகிறான்.
ஆனால் உண்மையில் வலீ எனப்படுவர் இறைவனுக்காக அவனில் வாழ்ந்து” அவனுக்காக அவனில் மரணமாகும் நேசனே ஆவர். இதனையே தான் ஒரு முறை இப்றாஹிம் இப்ன் அத்ஹம் வலீயாக ஆசை கொண்ட ஒருவருக்குப் பின்வருமாறு கூறி உணர்த்தினார்.

இந்த உலகுக்கு அல்லது மறுமைக்கு உரிய எதனையுமே நீ சார்ந்து விடாதே. பெருமைக்குரிய இறைவனை மட்டும் சார்ந்தவனாக இருந்து இறுதியில் அவனிலேயே அமிழ்ந்து- நாஸ்தியாகி –விடு”.
அபுல் காஸிம் அல் குஸைரீ(மரணம் ஹி.466) என்பவர் தமது ”ரிஸாலா – யே-குஸைரீயா ” என்னும் நூலில் வலீ என்னும் சொல்லுக்கு செயற்பாட்டு வினையில் “இறைவனால் நேசிக்கப் பட்டவர்” (வேதங்களை அருளிய அல்லாஹ்வே எனது வலீ” – குர் ஆன் 7.196 ) செய்வினையில் “அல்லாஹ்வுக்குப் பணிந்து வணங்குவதை நேசிப்பவன் ” என்றும் பொருள் கொள்ளலாம் என்று கூறுகிறார்.

ஸூபீயாக்களைக் குறிக்க முகர்ரபீன் (நெருங்கியவர்கள்) என்னும் சொல்லும் திரு குர்ஆனிலே பயன் படுத்தப்பட்டுள்ளது. (இறைவனை) நெருங்கியவனாக இருந்தால் அவனுக்கு சௌக்கியமும் சந்தோஷமும் உண்டு இன்பமளிக்கும் சுவனபதியும் உண்டு ”(56.88,89) என்றும்,”இவர்கள் (தங்கள் இறைவனை) மிக நெருங்கியவர்கள், இவர்கள் சுகம் தரும் சுவனபதியில் இருப்பார்கள்”(56.11) என்று வரும் திருக்குர் ஆன் வசனங்களில் இச் சொல் ஆளப்பட்டுள்ளது. ஷெய்கு ஷிஹாபுத்தீன் சுஹ்ரவர்தீ தமது “அவாரிபுல் மஆரிப் என்னும் நூலில், ஸூபீ என்னும் சொல் குர் ஆனில் வரவில்லை. எனினும் முகர்ரிப் (பன்மை : முகர்ரபீன்) என்னும் சொல்லுக்குக் கொள்ளப்படும் பொருளே ஸூபீ என்னும் சொல்லுக்கும் உரியதாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment