Monday, 16 March 2020

இறை மறுப்பு2

இறை நிராகரிப்பு (குஃப்ரு) மற்றும் இணைவைப்பு (ஷிர்க்) ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு உண்டு. இதில் அதுவும், அதில் இதுவும் இருப்பதைப் பற்றி நுட்பமான விளக்கங்கள் மார்க்க அறிஞர்களால் செய்யப்பட்டுள்ளன. இங்கே நாம் கவனிக்க வேண்டியது

இணைவைப்பு என்பது அநியாயம் என்பதிலும் அடங்கியது என்பதாகும்.
”நிச்சயமாக இணைவைத்தல் மிகப்பெரும் அநியாயமாகும்” (இன்னஷ் ஷிர்க்க லழுல்முன் அழீம் -31:13)

இறைவனை அறியாத காரணத்தினால் நிராகரிப்பும் இணைவைப்பும் உண்டாகின்றன. ஆதம் நபிக்குச் சிரம் பணிய இப்லீஸ் மறுத்தது ஏன்? அவனே ஒரு காரணம் சொல்கிறான்: “’நானே அவரை விட மேலானவன்; என்னை நீ நெருப்பிலிருந்து படைத்தாய்; ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய்’ என்று கூறினான்” (கால அனா ஃகைரும் மின்ஹு; ஃகலக்தனீ மின் நாரின் வ ஃகலக்தஹூ மின் தீன் -38:76)

இப்லீஸ் இறைவனை வெளிப்படையாக அறிந்தவனாகத்தான் இருந்தான். ஆனால் அவன் மனிதனின் அகமியம் என்ன என்பதை அறியவில்லை. மனிதனின் மூலப்பொருள் களிமண் என்பது வரைதான் அவனது அறிவு எட்டுகிறது. மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள அந்தரங்கத் தொடர்பினை அவன் அறியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவனுக்குத் தன் அகமியம் என்ன என்பதே தெரியவில்லை. அதனால்தான் தன் மூலப்பொருள் நெருப்பு என்பது வரை மட்டுமே அவனின் அறிவு செல்கிறது. நெருப்பு, களிமண் ஆகியவை சுயமாகத் தோன்றிய சுயம்புகள் அல்ல. அவை பூர்வீகப் பொருட்களும் (கதீம்) அல்ல. எனவே அவற்றின் மூலம் எது என்பதைப் பற்றிய ஞானம் அவனிடம் இல்லை.

அதாவது, இப்லீஸ் தன் அகமியத்தைப் பொருத்தவரை அறிவிலியாக இருந்தான். மனிதனின் அகமியத்தைப் பொருத்தவரை அறிவிலியாக இருந்தான். எனவே அல்லாஹ்வின் விஷயத்திலும் அறிவிலி ஆகிவிட்டான். அதனால் அவனில் அநியாயம் விளைந்தது.

இறைவனை அறிய வேண்டிய இரு நிலைகள் உள்ளன. ஒன்று தன்ஸீஹ். மற்றொன்று தஷ்பீஹ்.

தன்ஸீஹ் என்பது இறைவனின் தனித்த நிலை. அதாவது, படைப்புக்களை விட்டும் அப்பாலாகி இருக்கும் நிலை.

தஷ்பீஹ் என்பது இறைவன் படைப்புக்களுடன் இருக்கும் நிலை. அவன் எவ்வாறு படைப்புக்களுடன் இருக்கிறான் என்று அறிவதே தஷ்பீஹ் பற்றிய ஞானம் ஆகும்.

இப்லீஸிடம் இருந்தது தன்ஸீஹ் நிலையில் இறைவனைக் காணும் அறிவு மட்டுமே. அவனிடம் தஷ்பீஹின் அறிவு இல்லை. அதாவது, அல்லாஹ் ஆதமுடன் எவ்வாறு இருக்கிறான் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.

இவ்விரு நிலைகளிலும் இறைவனை அறிந்தவரிடமே ஏகத்துவத்தின் அறிவு (இல்முத் தவ்ஹீத்) இருக்கின்றது. இரண்டில் ஒன்று மட்டும் இருப்பது ஆபத்து.

அதாவது, தன்ஸீஹ் நிலையில் மட்டுமே இறைவனை அறிந்தவன் படைப்புக்களில் அல்லாஹ் இல்லை என்று சொல்லி குஃப்ரு என்னும் நிராகரிப்பில் ஆகிவிடுகிறான். இப்லீஸ் அப்படித்தான் காஃபிர் ஆனான்.

தஷ்பீஹ் நிலையில் மட்டுமே இறைவனை அறிபவன் இறைவன் படைப்புக்களுக்கு அப்பாற்பட்டவன் அல்ல என்னும் நிலையை அவன் மீது கற்பனை செய்வதால் இணைவைப்பில் ஆகிவிடுகிறான். அதாவது இடப் பரிணாமங்களில் இறைவனை மட்டுப்படுத்தி அவனையும் ஒரு படைப்புப் பொருளைப் போல் பாவிக்கின்றான். இதன் நீட்சியாக, இறைவனும் படைப்பும் ஒன்றே என்னும் இணைவைப்பும் உண்டாகி விடுகிறது.

இவ்விரு நிலைகளையும் பற்றி மகாஞானி இப்னுல் அரபி (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :

“தன்ஸீஹில் மட்டும் இறைவனை விளங்கினால்
அவனை நீ கட்டுப்பட்டவன் என்று விளங்கிவிட்டாய்
தஷ்பீஹில் மட்டும் இறைவனை விளங்கினால்
அவனை நீ மட்டுப்பட்டவன் என்று விளங்கிவிட்டாய்
இரண்டு குறிப்புக்களிலும் அவனை நீ அறிந்து கொண்டால்
ஞானிகளின் தலைவனும் வழிகாட்டியும் ஆவாய்”

- பிரபஞ்சக்குடிலிருந்து ரமீஸ் பிலாலி அவர்கள்.


No comments:

Post a Comment