Thursday, 19 December 2024

பூரியான் பாத்திஹா

*பூரிப்புடன் ஓதுவோம் 
பூரி ஃபாத்திஹா*

புனித ரஜப் மாதத்தில் 
இமாம் ஜஃபர் ஸாதிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் நினைவைப் போற்றி ஃபாத்திஹா ஓதும் வழமை நம் முன்னோர்களால் நடைமுறைப் படுத்தப்பட்டு இன்றளவும் தொடர்ந்து வருகிற ஒன்றாகும். 

இமாம் அவர்களின் சீரிய வரலாற்றின் சில சிறப்பு அம்சங்களை தெரிந்துக் கொள்வோம். 

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிவந்த இமாம்களில் ஆறாவது இமாமான ஜஃபர் ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 83 ரபீவுல் அவ்வல் மாதம் பிறை 17 திங்கள் இரவு பிறந்தார்கள்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்புப் பேரர் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகனார் அலி ஜெயினுல் ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களது மகனார் பாக்கிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களது மகன் இமாம் ஜஃபர் ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு ஆவார்கள்.

அன்னையின் பெயர் உம்முபர்வா என்பதாகும். அவர்கள் ஸெய்யிதினா அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் முஹம்மத் ரலியல்லாஹு அன்ஹு, அவர்களின் மகன் காஸிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகளாவார். 

காஸிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸெய்யிதினா அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மற்றொரு மகன் அப்துற்றஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகள் அஸ்மா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை மணமுடித்தே உம்மு பர்வாவை ஈன்றெடுத்தார்கள். 

முஹம்மது பாகிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், தமது குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு தம் தந்தை இமாம் அலி ஜைனுல் ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை வேண்டி நின்றார்கள் . அக் குழந்தைக்கு ஜஃபர் எனும் அழகுத் திருப்பெயரை சூட்டி மகிழ்ந்தனர்.

பிற்காலத்தில் உண்மைக்கு உறைவிடமாய் விளங்கிய இவர்களின் திருப் பெயரோடு ஸாதிக் என்னும்(உண்மையாளர்) என்ற பெயரும் ஒருங்கிணைந்து உலகம் முழுவதும் பெயர் பெற்றது.

கல்வி

தம்முடைய சிறு வயதில் தம் அருமை பாட்டனார் இமாம் ஜைனுல் ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமே இறைவனின் திருமறையையும், நபிகளாரின் அருள்மொழிகளையும் கற்றுத் தேர்ந்தனர்.

 இவர்களுக்கு 11 ஆண்டும் 10 மாதமும் எட்டு நாட்களும் நிறைவுற்ற போது இவர்களின் பாட்டனார் இமாம் ஜைனுல் ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மறைந்தார்கள். 

பின்பு இவர்களுக்கு இவர்கள் தந்தையே இறைஞான செல்வங்களை வாரி வாரி வழங்கினர்.

 தமது 31வது வயதில் இமாமின் பீடத்தில் அமர்ந்த இவர்களின் புகழ் எட்டுத்திக்கும் பரவியது. இவர்களிடம் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து கல்வி பயின்றனர்.


 சூபிச ஆடை

 இமாம் ஜாபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் ஆன்மிக பெரியார்கள் எல்லாம் இவ்வுலகில் குறைவான சுகத்துடனே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மெலிதான ஆடைகளை அணியாமல் முரட்டுத்தனமான ஸூஃப் என்று சொல்லப்படும் ஆடைகளையே அணிவார்கள். இதனால் தான், அவர்களுக்கு ஸுஃபியாக்கள் என்று சொல்லப்படுகிறது என்றும் ஒரு கருத்து உண்டு.

பெரும் செல்வந்தராக இருந்த இமாம் ஜஃபர் ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உயர் ரக ஆடைகளே அணிவார்கள். அதைக் கண்ட ஒருவர் நீங்கள் ஆன்மிக பெரியாராக இருந்தும் இவ்வுலக சுகத்திற்கு ஆசைப்படுகிறீர்களே என்றார். 

 இமாம் அவர்கள் தாம் அணிந்திருந்த சட்டையை கழற்றினார்கள். உள்ளே, முரட்டுத்தனமான கம்பளி ஆடையையே அணிந்திருந்தார்கள்.

அவர்கள் சொன்னார்கள் அல்லாஹ் எனக்கு செல்வத்தை அளித்திருக்கிறான். நான் எளிய ஆடையை அணிந்து சென்றால் யாரும் என்னிடத்தில் உதவி கேட்க மாட்டார்கள். அதே நேரத்தில் குறைவான சுகம் பெற வேண்டும் என்பதற்காகத் தான் முரட்டு ஆடையை உள்ளே அணிந்து இருக்கிறேன் என்றார்கள்.

அறிவுரை

தம் மாணவர்களை நோக்கி, ‘நீங்கள் பயபக்தி உடையவர்களாகவும், அமானிதத்தை நிறைவேற்றக் கூடியவர்களாகவும், மக்களிடம் நன்முறையில் பழகுபவர்களாகவும், சுருக்கமாகப் பேசக் கூடிய சன்மார்க்க பிரசாரகர்களாகவும் திகழுங்கள்’ என்று கூறினார்கள்.

அதற்கு மாணவர்கள், சுருக்கமாக கூறி மக்களின் மனதை எவ்வாறு தொடுவது?’ என்று கேட்டனர். அதற்கு இமாம் அவர்கள்’ நீங்கள் இறைக்கட்டளைக்கு பணிந்து நேர்வழியில் நடப்பின் அதிகமாகப் பேச வேண்டியதில்லை. உங்களின் செயலே பெரும் முழக்கம் செய்துவிடும். அதுவே பெரும் பிரகாசமாகிவிடும்’. என்று மறுமொழி கூறினார்கள்.

இனிய குணம் 

இனிய குணமும் அழகிய பண்பும் வாய்க்கப் பெற்ற இமாம் அவர்கள், தமக்கு தீங்கு செய்தவர்களுக்கும் நல்லதே செய்யும் பண்பு பெற்று விளங்கினர். 

தம் உறவினர் ஒருவர் தம்மை இழிவாகப் பேசிய போதும், அவர்களின் கஷ்டநிலைக்கு அவர்களுக்குத் தெரியாமலேயே உதவி செய்து வந்தார்கள். 

ஒருவர் வந்து தங்கள் சிறிய தந்தையின் மகன் தங்களை கண்டபடி ஏசுகிறான் என்று சொன்னார்கள். உடனே அவர்கள் இரண்டு ரக்அத் தொழுது இறைவனிடம், ‘இறைவனே நான் அவரை மன்னித்து விட்டேன். எனவே நீயும் அவரை மன்னித்து விடுவாயாக! என்று வேண்டினர்கள்.

 இதுகண்டு அந்த நண்பருக்கு வியப்பு ஏற்பட்டது. இமாம் அவர்கள் அவரை நோக்கி, ‘நம்மை ஒருவர் ஏசிவிடின் அதற்கு நாம் எழுபது விதங்களில் நற்காரணங்களை கற்பிக்க வேண்டுமேயன்றி, அவரை நாம் திரும்பவும் ஏசி விடக் கூடாது. அதற்கு நற் காரணம் ஒன்றையேனும் நாம் காணாவிடில் அதற்கு ஏதேனும் நாம் அறியாமல் நற்காரணம் இருக்கவேண்டும் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்’ என்று அருள்மொழி கூறினர்.

 இமாம் அபூஹனீஃபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இமாம் ஜஃபர் ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பைஅத் என்னும் ஞானத்தீட்சைப் பெற்று அவர்களிடம் இரண்டு வருடங்கள் ஞானப் பயிற்சியில் இருந்தார்கள்.

ஒருவர் அபூஹனீஃபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் தங்களின் வயது என்ன என்று கேட்டபோது இரண்டு வயது என்றார்கள்.

அதைக் கேட்ட அந்த நபர் ஆச்சரியப்பட்டப் பொழுது அதைத் தெளிவு படுத்திய இமாமவர்கள் நான் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களிடம் இரண்டு வருடம் பயின்றேன் அதைத்தான் நான் இவ்வாறு குறிப்பிடுகின்றேன் அந்த 2 வருடம் மற்றும் இல்லாவிட்டால் நான் அழிந்து போய் இருப்பேன் என்று கூறினார்கள்

ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களை அணுகி அறிவுரை பெற்று ஆன்மீகப் பரிபக்குவம் பெற்றவர்களில் சுல்தானுல் ஆரிபீன் அபூயஜீத் பிஸ்தாமி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர். 

நான் நானூறு ஆசிரியர்களை அணுகி ஆன்மிகக் கல்வி பயின்றுள்ளேன். ஆனால் நான் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சந்திக்காவிடின் ஒரு முஸ்லிமாகி இருக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்கள்.

பாதிரியார்களிடம் 

ஒரு முறை ஹஜ்ரத். இமாம் ஜஃபர் ஸாதிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு ஊருக்கு போய்க்கொண்டு இருந்த போது, மாபெரும் கிறிஸ்தவ பாதிரிமார்கள் கூட்டம் நடந்து கொண்டு இருந்தது

சுமார் ஆயிரம் பாதிரியார்கள் கலந்துகொண்ட கூட்டம் அது, தலைமை பாதிரி, இமாம் அவர்களை அழைத்து இஸ்லாம் கூறும் சொர்க்கத்தின் அமைப்பில் தனக்கு மூன்று சந்தேகங்கள் இருப்பதாலும் அதனை இமாம் அவர்கள் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் கேட்டார். இமாம் அவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டார்கள்.

முதல்சந்தேகம்.:-

சொர்க்கத்தில் ஒரு மரம் இருப்பதையும் அதில் அனைத்து சொர்க்கவாசிகளும் எவ்வளவு கனிகளைப் பறித்தாலும் கனிகள் குறைவதே இல்லை என்று உங்கள் மதம் கூறுகிறதே அது நம்பும்படியாகவா இருக்கிறது,,,,,,?

அல்லாஹ்வால் முடியும் என்று கூறாமல், புரியும்படியாக தகுந்த சாத்தியங்களுடன் பதில் கூறுங்கள் என்றார் பாதிரி..! இமாம் அவர்கள் அமைதியாகக்கூறினார்கள்.

மிக எளிமையான பதில்தான்,, ஒருமெழுகுவர்த்தியில் எத்தனை மெழுகுவர்த்திகளை ஒளி ஏற்றினாலும் முதல் மெழுகுவர்த்தியில் ஒளி குறைவதில்லையே, பாதிரியார் புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டார்,,,,

அடுத்த கேள்வி,,,,,:- சொர்க்கத்தில் உள்ள சொர்க்க வாசிகள் எதை உண்டாலும் எவ்வளவு உண்டாலும் மலஜலம் கழிப்பதில்லையாமே அதெப்படி சாத்தியம்?

 இமாம் அவர்கள் பதிலளித்தார்கள்.
 தாயின் வயிற்றிலிருக்கும் சிசுவுக்கும் உணவளிக்கப்படுகிறது. அது மலஜலம் கழிக்கிறதா என்ன.

உலக உதாரணங்களைக் கொண்டு பதிலளிக்கப்படுவதில் தலைமை பாதிரிக்கு திருப்தி. முகத்தில் சந்தோஷம்.

மூன்றாவது சந்தேகத்தையும் தீர்த்து வையுங்கள்:- சொர்க்கத்தில் ஒரு சுனை இருக்கிறதாமே,,,, அதில் அறுசுவை நீரும் கிடைக்குமாமே ஒரே சுனையில் அதெப்படி முடியும்,,,

இமாம் அவர்கள் சொன்னார்கள். 

மனிதனின் கண்ணீர் உவர்ப்பு, உமிழ்நீர் இனிப்பு, சிறுநீர் காரம், மலம் வேறு சுவை, இதெப்படி ஒரே உடலில் சாத்தியமோ அப்படித்தான் இதுவும்.

பதில்களைக்கேட்ட அத்தனை பாதிரிகளுக்கும் ஆச்சர்யம், திருப்தி. சபையில் ஒரே ஆரவாரம். அவ்வளவுதான் ஒருவர் பின் ஒருவராக ஆயிரம் பாதிரிகளும் இமாம் அவர்களின் கையை பிடித்து மாணவர்களாக இணைந்து கொண்டார்கள்

சொர்க்கத்து உணவு

சேக் மொகுதும் என்பவர்கள் அறிவிக்கிறார்கள்:

 ஒருமுறை கஃபாவின் அருகில் உள்ள ஆபூ குபைஸ் என்ற மலைக் குன்றின் மீது ஒரு அழகான மனிதர் இறைவணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை கண்டேன். அவர்கள் அருகில் நானும் சென்றேன். அந்த அழகிய மனிதர் நீண்ட நேரம் இறைவனின் தியானத்திலே இருந்தார்கள். இறுதியாக இறைவா! நான் நோன்பு திறக்க உணவு தருவாயாக எனது ஆடையை பழையதாகிவிட்டது புதிய ஆடை தருவாயாக என்று பிரார்த்தித்தார்கள். என்ன அதிசயம் வானத்திலிருந்து திராட்சைப் பழங்களும் புதிய இஹ்ராம் ஆடை ஒன்றும் வந்தது, நான் உடனே அவர்களிடம் சென்று இந்த உணவில் எனக்கும் பங்கு உள்ளது. நீங்கள் துஆ கேட்டபொழுது நான் ஆமீன் என்று சொன்னேன் எனவே தான் எனக்கும் அதில் பங்கு உள்ளது என்றேன் என்று கூறினேன் நானும் இந்த உணவைக் கொண்டு நோன்பு திறக்கலாமா என்று அனுமதி கேட்டேன் 

அவர்கள் இன்முகத்துடன் தாராளமாக வாருங்கள் என்று அழைத்தார்கள் .விண்ணிலிருந்து வந்த பழங்கள் மிகவும் சுவையாக இருந்தது எடுக்க எடுக்க வந்து கொண்டே இருந்தது குறையவில்லை

பின்னர் அந்த புதிய ஆடையை உடுத்திக் கொண்டு பழைய ஆடையை தோளில் போட்டுக் கொண்டார்கள் நாங்கள் இருவரும் மஃரிப் தொழுதுவிட்டு உம்ராவிற்கான தவாஃப் செய்ய புறப்பட்டோம். 

அப்பொழுது ஒரு நபர் இந்த ஆடை புதிதாக உள்ளதே என்று அவர்களிடம் கூற உடனே அதைக் கழற்றி பழைய ஆடையை மீண்டும் உடுத்திக் கொண்டார்கள். அந்த புதிய ஆடையை அவருக்கு அன்பளிப்புச் செய்தார்கள். 

உடனே நான் அந்த ஆடையை பெற்ற மனிதரிடம் இந்த ஆடையை உங்களுக்கு அன்பளிப்புச் செய்த பெரியவர் யார்? என விசாரித்தேன். மிகவும் ஆச்சரியத்துடன் இவர்களை உங்களுக்கு தெரியாதா இவர்கள் தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடைய வாரிசான இமாம் ஜஃபர் ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு என்று கூறினார்கள்.

இத்தகைய சிறப்பு மிக்க மனிதர்கள் அத்தகைய குடும்பத்தில் தான் உதிக்க முடியும் என கூறிக்கொண்டார்கள்

அரசர்கள் பொறாமை

அப்பாஸிய கலீபா மன்ஸுர் அவர்களுக்கு இமாம் அவர்களின் செல்வாக்கு உயர்ந்து வருவதைக் கண்டு அவர்கள் மீது வெறுப்பு ஏற்படலாயிற்று. அவர்களின் ஆதரவாளர்களில் சிலர் அப்பாஸிய கிலாபத்தை எதிர்த்து புரட்சி செய்வதையும், ஈராக் மக்கள் ‘ஜகாத்’ பணத்தை சேகரித்து அவர்களுக்கு அனுப்பி வைப்பதையும் கண்டு மன்னர் பொறாமையால் வெந்து அவர்களை ஒழித்துக் கட்ட தீர்மானித்து, ஹிஜ்ரி 147ம் ஆண்டு ஹஜ் செய்ய மக்கா வந்தபோது ஹஜ் கடமையை முடித்து விட்டு மதீனா நகரம் வந்தவுடன் இமாம் அவர்களை அழைத்து வர தம் அமைச்சர் ரபீஉவை அனுப்பினார். ஆனாலும் மன்னரால் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டதை நிரூபிக்க முடியவில்லை.

எனவே அவர்களின் மாண்பினைப் போற்றி, அவர்களுக்குப் பரிசுகள் கொடுத்து அனுப்பிவைத்தார்.

 ஆனாலும் இமாம் அவர்கள் மீது மன்னர் கொண்ட குரோதம் நீங்கவில்லை. மதீனாவில் அமைதியாக வணக்க வழிபாடுகளில ஈடுபட்டிருந்த இமாம் அவர்களை பக்தாத் அழைத்து வரச்செய்தார்.

 இமாம் அவர்கள் அரண்மனைக்குள் நுழைந்ததும், மன்னர் அவர்களை வரவேற்று உபசரித்து அவர்களின் வேண்டுகோள்படி மதீனாவிற்கே அனுப்பி வைத்தார்.

மன்னர் சொன்னதற்கு நேர் மாறாக நடந்து கொள்வது பற்றி அமைச்சர் ரபீஉ கேட்டபோது, இமாம் அவர்கள் அரண்மனைக்குள் நுழைந்தபோது அவர்களின் தலைமேல் பெரும் பாம்பு படம் எடுத்து என்னை எச்சரிக்கை செய்வது போல் இருந்ததை கண்டு மருண்டு விட்டேன் என்றார்.

பின்னர் ஒருநாள் ஒற்றர் படைத் தலைவன் முஹம்மது பின் சுலைமானை அழைத்து, அவன் காதோடு காதாக மன்னர் ஏதோ சொல்ல அவன் அடுத்த கணம் அவ்விடத்தைவிட்டு நகர்ந்தான். பின் மதினா சென்று இமாம் அவர்களை அடிக்கடி சந்தித்து அறிவுரை கேட்கும் வழக்கமுடையவன் போல் மாறினான்.

மறைவு

ஒருநாள் ஹிஜ்ரி 148 ரஜப் பிறை 15 தமக்கு நஞ்சு ஊட்டப்பட்ட உணவால் முடிவு நெருங்கிவிட்டதை அறிந்து தமது மகன் மூஸல் காழிம் அவர்களை அழைத்து அறிவுரை பகர்ந்தார்கள். தம் நண்பர்கள், மாணவர்களுக்கு நல்லுரைகள் நல்கி விடைபெற்றார்கள்.

அவர்கள் ஹஜ் செய்தபோது அணிந்த இஹ்ராம் துணி மற்றும் அவர்களிடமிருந்த இமாம் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைப்பாகைத் துணியையும் கொண்டு அவர்களுக்கு கஃபனிட்டு ஜன்னத்துல் பகீஃயில் அவர்களின் தந்தையார், பாட்டனார் ஆகியவர்களின் அடக்கவிடத்திற்கு அண்மையில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

நன்றி: அல் அஸ்ரார் மெய்ஞ்ஞான மாத இதழ் 
9841567213

No comments:

Post a Comment