Sunday, 26 July 2015

நம் போன்ற மனிதர் அல்ல

لست كهيئتكم
நான் உங்கள் அமைப்பில் உள்ளவனல்லன்

என்றும் சொல்லியிருப்பதை உனது கவனத்திற் கொண்டு சிந்தனை செய்து பார். இவ்வசனங்கள் யாவும் நபீ ஸல் அவர்கள் நம் போன்ற மனிதரல்லர் என்பதை வலியுறுத்தி நிற்பது உனக்கு புரியவில்லையா?

மேற்கண்ட வசனங்கள் சரியான நபீ மொழிகளில் வந்துள்ள வசனங்களாகும். இவை “நான் உங்கள் போன்ற மனிதரென்று நீங்கள் சொல்லுங்கள்” என்ற திருமறை வசனத்துக்கு முரணானவையாக உனக்குத் தெரிகிறதல்லவா?

நீ இது பற்றி சற்றேனும் சிந்தனை செய்து பார்த்தாயா? நீ திருக்குர்ஆனை எடுத்து நபீ மொழியை விடப் போகிறாயா? அல்லது நபீ மொழியை எடுத்து திருக்குர்ஆனை விடப்போகிறாயா? என்ன செய்யப் போகிறாய்? திருக்குர்ஆன் நபீ மொழிக்கு மாறாகாதென்பதையும், நபீ மொழி திருக்குர்ஆனுக்கு மாறாகாதென்பதையும் நீ ஏற்றுக் கொள்கிறாயா இல்லையா?

நபீ ஸல் அவர்கள் நம் போன்ற சாதாரண மனிதனென்று நீ வாதிடுவது நீ திருக்குர்ஆனை எடுத்து நபீ மொழியை தூக்கி எறிந்து விட்டாய் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. நபீயைத் தூக்கியெறியும் நீ நபீ மொழியைத் தூக்கி எறிவதில் என்ன வியப்பிருக்கிறது​?

நீ ஒன்றை எடுத்து மற்றதை விடுவதற்கு இஸ்லாத்தில் இடமேயில்லை. இரண்டையும் எடுத்தே ஆக வேண்டும்.

ஆகையால் ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரண்டையும் எவ்வாறு எடுக்க வேண்டுமென்பதை உனக்குச் சொல்லித்தருகிறேன். நபீ ஸல் அவர்கள் தங்களின் பணிவை வெளிப்படுத்துவதற்காகவும், அவர்களைத் தெய்வம், மலக், ஜின், என்றெல்லாம் சந்தேகப்பட்டவர்களின் சந்தேகத்தை நீக்கி வைப்பதற்காகவுமே “நான் உங்கள் போன்ற மனிதன்” என்று சொன்னார்களேயன்றி அவர்களின் எதார்த்தத்தைக் கூறுவதற்காக அல்ல.

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்துக்கு இவ்வாறுதான் கருத்துக்கொள்ளுதல் வேண்டும். நபீ ஸல் அவர்கள் தங்களின் எதார்த்தத்தையும், அந்தஸ்த்தையும் வெ ளிப்படுத்துவதற்காகவே “நான் உங்கள் போன்ற மனிதனல்லன்” என்று கூறினார்களேயன்றி தங்களின் பணிவை வெளிப்படுத்துவதற்காக அல்ல.

மேற்கண்ட நபீ மொழிக்கு இவ்வாறுதான் கருத்துக்கொள்ளுதல் வேண்டும்.

நபீ ஸல் அவர்கள் தங்களின் பணிவை வெளிப்படுத்துவதற்காக பல இடங்களில் பல்வேறு வசனங்களைப் பயன்படுத்தியுள்ளார்கள். இவ்வுண்மையைப் புரியாமல் அவ்வசனங்களின் வெளியரங்கத்தைக் கொண்டு மட்டும் அவர்களைத் தரக்குறைவாகக் காணுதல் கூடாது.

ஒரு சமயம் நபீ ஸல் அவர்கள்

 لاتفضلوني علي يونس بن متي
மத்தாவின் மகன் யூனுஸை விட என்னைச் சிறப்பாக்கி விடாதீர்கள் என்று கூறினார்கள்.

நபீ ஸல் அவர்கள் தங்களின் பணிவை வெளிப்படுத்துவதற்காகவே இவ்வாறு கூறினார்கள். இவ்வுண்மையைப் புரிந்து கொள்ளாமல் இக்கூற்றைப் பிடித்துக் கொண்டு நபீ ஸல் அவர்களை விட யூனுஸ் நபீ மேலானவர்களென்று வாதிட முடியுமா? அவ்வாறு வாதிடுவது சரியாகுமா?

எனவே, உத்தம நபீ வெளியரங்கத்தில் உன் போன்ற மனிதனாயிருந்தாலும்கூட அவர்கள் அகமியத்திலும், அந்தஸ்திலும், எதார்த்தத்திலும் உன்னையும் அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட சர்வபடைப்புக்களையும் விட மேலானவர்களேயாவர்.

அவர்கள்தான் படைப்புக்களில் சிறந்தவர்கள். அவர்கள் போன்ற ஒரு சிருட்டி இதுகாறும் வெளியாகவில்லை. வெளியாகப்போவதுமில்லை. உலகில் எந்த ஒரு தாயும் குணத்திலும், தரத்திலும், உடலமைப்பிலும் அவர்கள் போன்ற ஒரு குழவியைப் பெற்றதே இல்லை.

அல்லாஹ்வின்அடியானே!
உத்தம நபீ உன் போன்ற சாதாரண மனிதனென்று வாதிடும் நீ உன் நெஞ்சில் கைவைத்துச் சொல். அவர்கள் உன் போன்ற மனிதன்தானா? அல்லது உனக்கு வேறுபட்டவர்களா? நெஞ்சைத் தொடு. அது சொல்வதை எடு.

அல்லாஹ்வின் அடியானே!
இது தொடர்பாக உன்னுடன் விவாதிக்கவோ, உன்னைக் கீழ்த்தரமாக இழிவுபடுத்தவோ நான் விரும்பவில்லை. அது எனது குறிக்கோளுமில்லை.

ஆயினும் இங்கு உன்னைப் புண்படுத்தும் சொற்கள் இடம் பெற்றிருந்தால் அது கொள்கை ரோஷத்தின் வெளிப்பாடு- உருவமென்று அறிந்துகொள் இப்லீஸ் என்றதும் “லஃனதுல்லாஹ்” என்று அவனைச் சபிப்பது நம்மீது கடமையில்லாவிட்டாலும் நாம் சபிக்கத்தான் செய்கிறோம். ஏன்? இது என்ன ரோஷம்? சிந்தனை செய்து உன் நெஞ்சில் தோன்றியதை நிறுத்திவிடு. அழுக்கை அகற்றி விடு.

இது தொடர்பாக உன்னுடன் விவாதிக்க விரும்பாத காரணம் இயலாமையல்ல. ஆனால் இன்று ஒரு விடயம் குறித்து விவாதிக்கும் வாதி, பிரதிவாதி இருவரிடத்திலும் விவாதத்தின் உயிரான “இக்லாஸ்” என்ற தூய குறிக்கோள் இருப்பதாக நான் அறியவில்லை. காண்பதரிதாக உள்ளது .

“இக்லாஸ்” என்ற அந்ததூய குறிக்கோள் என்னவெனில் வாதியும், பிரதிவாதியும் முன்வைக்கும் ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் முடிவை இருவரும் ஏற்றுக் கொள்ளுதலாகும். இதுவே அதன் உயிர். அதோடு இருவரும் உண்மையைக் கண்டறியும் குறிக்கோளுடன் “நிய்யத்” விவாதித்தல் வேண்டும்.

No comments:

Post a Comment